top of page
Writer's pictureupSpark Technologies

​​லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவப் பதட்ட நிலை எளிதில் தீராது; கர்னல் ஆர் ஹரிஹரன்

Image Courtesy: Economic Times

Article 66/2020

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில்,  தற்போது நிலவும் (-)10 டிகிரிக்கும் குறைவான பயங்கர குளிரில், நேருக்கு நேராக போருக்கான தயார் நிலையில், இந்திய சீன ராணுவப்படைகள் நிற்கின்றன.  இருந்தாலும் அங்கே இருதரப்பு படைகளும் எதிர் கொள்ளம் மிகப் பெரும் ஒரே எதிரி இயற்கையே. அங்கு நிலவும் பயங்கர குளிரும், 14,000 அடிக்கு மேலான மலைப் பகுதிகளில்,  பிராணவாயு குறைவால், ஏற்படும் வீரர்களுக்கு உயிரைக் குடிக்கக்கூடிய மூச்சை முட்டும் சூழ்நிலையும், போரைவிட மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை.

இத்தகைய, கொடூரமான சுற்றுப்புறச் சூழ்நிலையில், போர் கருவிகளும், விமானங்களும், ஆயுதங்களும், ஏன் சொல்லப் போனால் போர் வீரர்கள்கூட,  முழுத்திறனுடன் செயல் படுவதில்லை. இப்படி இருந்த போதிலும், பேச்சுவார்த்தைகள் மூலம் இருநாடுகளும் ஒரு சுமூகமான முடிவெடுத்து, எல்லையில் போர் மூளக்கூடிய பதட்ட நிலையைக் குறைக்க, படைகளைக் குறைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு விடைகாணாத கேள்விக் குறியாகவே தொடர்கிறது.

இந்திய-சீன ராணுவங்களின் உயர் மட்டத் தலைவர்கள் பதட்ட நிலையைத் தவிர்க்க, ஜூன் 6ம் தேதி நடத்திய முதல் நேரடி பேச்சுவார்த்தைக்குப் பின்பு, கடைசியாக நவம்பர் 7ம் தேதியன்று எட்டாவது முறையாக சந்தித்தார்கள். செப்டம்பர் 4 மற்றும் 10 ஆகிய தேதிகளில், மாஸ்கோவில் இரு நாடுகளும் அமைச்சரளவில் தொடர் கலந்துரையாடல்கள் நடத்தின. இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மற்றும் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர், சீனத் தரப்பு அமைச்சர்களை சந்தித்தனர். பதட்ட நிலையைக் குறைக்க ஐந்து அம்ச திட்டம் ஒன்று வெளியிடப்பட்டது. ஆனால், படைக்குவிப்பை மேலும் அதிகரிக்க வேண்டாம் என்ற ஒப்புதல் தவிற, மற்ற எந்த அம்சமும் இதுவரை நிறைவேற்றப் படவில்லை. 

செப்டம்பர் 21ம் தேதி நடந்த, ஆறாவது சுற்று ராணுவப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், இரு தரப்பினரும் முன்னணி நிலைகளில் மேலும் படைகளைக் குவிப்பதை தவிர்க்கவும், எல்.ஐ.சி என்று கூறப்படும் நடைமுறை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒருதலைப் பட்சமாக மாற்றுவதைத் தவிர்க்கவும், இருதரப்பும் ஒப்புக்கொண்டனர். இருந்தாலும், எட்டாவது முறை பேச்சு வார்த்தை நடக்கும் போது, இரு தரப்பும் எல்லையில் படைக் குறைப்புக்கான நெறிமுறைகளை வகுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அதற்கு மாறாக ராணுவ அளவிலான பேச்சுவார்த்தைகள் தற்போது முடக்கப்பட்டுள்ளன. இரு ராணுவங்களின் உயர் மட்ட தலைவர்களும் ஹாட்லைன் என்று கூறப்படும் நேரடி தொலைபேசி வழியாக மேற் கொண்ட பேச்சுவார்த்தைகளில், இதுவரை, புதிய சுற்று பேச்சுவார்த்தைக்கான தேதிகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று தெரிகிறது.

ஏன் ராணுவப் பேச்சுவார்த்தைகளில் தேக்க நிலை தொடர்கிறது?

இதற்கு, மிகவும் முக்கிய காரணம், இந்தியப் படைகள் எல்லையில்  சீன ஊடுருவலைத் தவிர்க்கவும்,  தனது போர் நிலைகளை பலப்படத்தவும், ஆகஸ்ட்  29-30ந் தேதி இரவன்று,  பங்காங் ட்சோ வடக்கு-தெற்கு எல்லையில் உள்ள மலை உச்சிகளை ஆக்கிரமித்தது. அந்த முயற்சியால், சீனப் படைகள் ஊடுருவ உபயோகித்து வந்த  ஸ்பங்கூர் ஏரியின் தெற்குக் கரை வழி, தற்போது இந்தியப் படைகளின் நேரடியான ஆளுமையின் கீழ் வந்துள்ளது. இந்தியப் படைகளும், பீரங்கிகளும், ஸ்பங்கூர் பாதைவழியாக வரும் சீனப் படைகளையும், போர்நிலை வியூகங்களையும், குண்டு வீசித் தகர்க்கும் நிலையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்தப் பாதை, சீன மாநிலங்களான திபெத்-ஜின்ஜியாங் எல்லையை அடைவதற்கான முக்கியமான வழியாகும். தற்போதைய நிலையில், இந்தியப் படைகள் ரிஜாங் லா-ரெசின் லா மலை உச்சிகள் வழியாக, இந்த இரு மாநிலங்களை இணைக்கும் எல்லைப் பாதையின் மீது தாக்குதல் தொடுக்க முடியும் நிலையில் உள்ளன. 

இத்தகைய, இந்தியப் படைநிலை மாறுபாடுகளால்,  லடாக்கில் உள்ள சீன ராணுவம் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளது. இத்தகைய பாதுகாப்பற்ற சூழ்நிலையிலிருந்து, போர்நடத்தமால் தன்னை விடுபடுத்திக் கொள்ள, சீனா இரண்டு உத்திகளை மேற் கொண்டுள்ளது. ஒன்று, தொடரும் பேச்சுவார்த்தைகள் மூலம் இந்தியப் படைகள் ஆகஸ்டு மாதம் ஆக்கிரமித்துள்ள மலை உச்சிகளிலிருந்து படைகளை நீக்கி, ஜூன் 5ந் தேதி கல்வான் தாக்குதலுக்கு முன்பிருந்த எல்லைக் கேட்டு நிலைக்கு இருதரப்பும் திரும்புவது. இதற்கு, இந்தியா இதுவரை ஒப்புதல் தெரிவிக்கவில்லை, ஏனெனில் பங்காங் ட்சோ பகுதியில் இந்தியப் படைகள் வசம் உள்ள மலை உச்சிகளிலிருந்து படை நீக்கம் செய்தால், அவற்றை சீனா மீண்டும் ஆக்கிரமிக்காது என்பதில் இந்தியாவுக்கு நம்பிக்கை இல்லை.

இந்திய-சீன உறவில் ஏற்பட்டுள்ள இந்த மாபெரும் திருப்பத்தை, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராளுமன்றத்தில் செப்டம்பர் 15ம் தேதி அன்று நிகழ்த்திய தனது பேச்சில் தெளிவாக எடுத்துக் கூறினார். அதன்படி, சீனா லடாக் எல்லையில் எடுத்துள்ள ஆக்கிரமிப்பு முயற்சிகளை கைவிடும் வரை, இந்தியா அவற்றை நீக்க எடுத்துள்ள ராணுவ முயற்சிகளில் மாற்றம் இருக்காது என்று கூறினார். 

இரண்டாவது உத்தியாக, சீனா ஸ்பங்கூர் ஏரியின் தென்கரைப் பாதையைத் தவிர்த்து,  சீன ராணுவத்தின் உபயோகத்திற்கு இன்னொரு பாதையை உருவாக்கி வருகிறது. இந்த முயற்சி முடியும் வரை சீனா பேச்சு வார்த்தை என்ற தொடர்ந்து கூறிக்கொண்டிருக்கும்.  

இத்தகைய இழுபறியான சூழ்நிலையில், இரு ராணுவப் படைகளும் பயங்கர குளிரிலிருந்து தங்களையும், தமது ராணுவ உடமைகளையும் பாதுகாக்கத் தேவையான உணவுப் பொருட்கள், உடுப்புக்கள், உபகரணங்கள் ஆகியவற்றை குவித்துள்ளன. பாதுகாப்பான வசிக்கும் இடங்கள், போரின் தேவைக்கான ஆஸ்பத்திரிகள் ஆகியவற்றை எல்லைப் பகுதியில் உண்டாக்கியுள்ளன.

அவை, அவர்கள் தொடர்ந்து எல்லைப் பகுதியில் நிலை கொள்வதற்கான முயற்சியே என்று தோன்றுகிறது. அப்படி இருந்த போதிலும், இந்திய அரசுத் தரப்பில் பேச்சுவார்த்தை தொடரும் என்ற எதிர்பார்ப்பு நீடிக்கிறது. இதன் காரணம்,  அரசு சீனாவுடன் மேற் கொண்டு வரும் அரசியல்  மற்றும் ராஜதந்திர தொடர்புகளே என்று நம்பலாம்.  இது, போரைத் தவிர்த்தி இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள புகைச்சலைத் தீர்த்து, உறவின் வருங்காலத்தை நிர்ணயிக்க கூடிய முடியும் என்பதில் இந்தியாவுக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. 

ஹிந்துஸ்தான் டைம்ஸ் பிரசுரித்துள்ள கருத்தின் படி, லடாக் எல்லைக் கோட்டில் அடங்கியுள்ள 12 வேறுபாடுள்ள இடங்களில்,  சமர் லுங்பா, டெம்சோக், சூமார் உள்ளிட்ட  ஆறு இடங்களை சீனா ஆக்கிரமிக்க முயற்சிக்கலாம் என்று ராணுவம் தயாராக இருப்பதாக எச்சரித்துள்ளது. இந்தப் பிரச்சினை லடாக் எல்லையில் தீரவேண்டுமானால், இரு தரப்பு நிபுணர்கள் லடாக் எல்லை பேச்சுவார்த்தைகளில் ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி சீனா சீரான வரைபடங்களை அளிக்க வேண்டும். அதன் பிறகுதான், இரு தரப்பும் நேர்மையான முடிவெடுக்க முடியும். 

ஆனால் சீனாவின் மீது மோடி அரசு வைத்திருந்த ஆழ்ந்த நம்பிக்கையை, கடந்த ஜூலை மாதம் லடாக்கில் கல்வான் பகுதியில் எதிர்பாராத விதமாக சீனப்படைகளுடன் நடந்த கைகலப்பில் கர்னல் பாபு உட்பட 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப் பட்ட சம்பவம், தகர்த்து விட்டது. ஏனெனில், அதுவரை இந்திய-சீன உறவில் சீனாவின் கைதான் ஓங்கி இருந்தது. அவ்வப்போது, சீனா காட்டிய உதாசீனங்களையும், அத்து மீறல்களையும் இந்தியா பொறுமையுடன் சுமூகமான உறவுக்காக ஜீரணித்து வந்தது.  ஆனால், சீனா பேச்சுவார்த்தையில் படைகளைப் பின்னெடுக்க ஒப்புக்கொண்ட பின்பும், கல்வான் பகுதியில் உயிர் சேதம் ஏற்படுத்திய சீனாவின் செயல், இந்தியாவின் தன்மான உணர்ச்சியை தட்டி எழுப்பியுள்ளது. 

அதைத் தொடர்ந்து, இரு நாடுகளிலும் பெரும்பாலான மக்கள் இந்தப் பிரச்சினை, இருநாட்டு எல்லையைக் கடந்த, தேசிய மானப் பிரச்சினையாக தற்போது கருதுகின்றனர். இந்தியா ஜனநாயக நாடு. ஆகவே, மக்களின் உணர்ச்சிகளையே அரசின் வெளியுறவு பொதுவாக பிரதிபலிக்கிறது. அதை மனதில் கொண்டே, பிரதமர் மோடி செயல்பட முடியும். 

சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரும் தலைவராக கருதப்படும் ஷீ ஜின்பிங் தனது இச்சைப் படி முடிவு எடுக்கும்  அதிகாரம் கொண்டவர். அதற்கு ஆதரவாக செயல்பட, கட்சியின் மத்தியத் தலைமையில் பல மாற்றங்களை ஏற்கனவே மேற்கொண்டவர். ஆகவே அவருக்கு, பிரதமர் மோடியை விட, முடிவெடுக்கும் சுதந்திரம் அதிகமாக உள்ளது.

இருந்தாலும், உலக அளவில் அவர் எடுத்த பல நிலைப்பாடுகள், முக்கியமாக கோவிட் வைரஸ் காய்ச்சல் பிரச்சினை, அதற்கு முன்பே சீனா அடைந்த பெரும் பொருளாதார பின்னடைவு, தென் சீனக் கடலில் சீனப்படைகள் காட்டிவரும் அழுத்தம், ஹாங்காங் மற்றும் தைவான் நாட்டில் ஏற்படுத்தியுள்ள பதட்டமான சூழ்நிலை ஆகியவை, சீனாவுக்கும், ஷீயின் தலைமைக்கும் உலக அளவில் பெரும் களங்கம் ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், சீன ராணுவம் லடாக்கில் சங்கடத்தில் இருக்கும் போது,  பொதுமக்களின் தேசிய உணர்வுக்கு எதிரான எந்த முடிவை ஷீ எடுப்பார் என்று எதிர்பார்க்க முடியாது.

ஆகவே, தற்போதைய கணிப்பின் படி, லடாக் தற்போதைய எல்லைக் கோட்டைல் இந்திய-சீனப் படைகளின் இழுபறி நிலை, கடுங்குளிர் காலத்திலும் தொடரும் என்றே தோன்றுகிறது.

(கர்னல் ஆர் ஹரிஹரன் இந்திய ராணுவத்தின நுண்ணறிவுத் துறையில் தெற்காசிய நாடுகள் மற்றும் தீவிரவாதப் பிரிவுகளில் அனுபவம் பெற்றவர்.  அவர் சென்னை சீன ஆய்வு மையத்தின் அங்கத்தினர் ஆவார். ஈ.மெயில்: haridirect@gmail.com​. Views expressed are personal.)

0 views0 comments

Comments


LATEST
bottom of page