Image Courtesy: Wikipedia Commons
Article 61/2020
நால்வர் அணி (The Quad) என்று பரபரப்பாகப் பேசப்படும் ஒரு கூட்டமைப்பு உருவாகிக் கொண்டு, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தற்போது வளர்ந்து வருகிறது. அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்ட நம் தமிழ்நாட்டு மக்கள், எதிர்வரும் தேர்தலை மனதில் வைத்து, இதை மற்றொரு இந்திய அரசியல் கூட்டணி என்று தப்புக் கணக்குப் போடவும் கூடும். இது நம் நாட்டு அரசியல் கூட்டணியே அல்ல. ஆனால் நம் நாட்டிற்கு மிகவும் இன்றியமையாததாக இன்று உருவெடுத்து வந்து கொண்டிருக்கிறது. நமக்கு மட்டுமல்ல, ஆசியாக் கண்டத்திற்கே, ஏன் உலகத்திற்கே தேவையான ஒரு கூட்டமைப்பாகக் கூடச் சிலர் பார்க்கின்றனர். இந்த நால்வர் அணியில் யார் யாரெல்லாம் இருக்கின்றார்கள்? அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா. எனவே, என்னதான் இது? இவர்கள் ஒன்று சேர வேண்டிய அவசியம் என்ன? பார்ப்போம். அதைப் பார்ப்பதற்கு நாம் சீனாவைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
செஞ்சீனாவின் சுருக்கமான வரலாறு
கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளுக்கு மேலாக மன்னர்களால் (நாடு வளர வளர மன்னர்கள் பேரரசர்களானார்கள்) ஆளப்பட்ட நாடு சீனா. மஞ்சள் நதியின் வெள்ளச் சமவெளியில் (flood plains) உருவான ஒரு நாகரீகம் ஒரு பேரரசாக மாறியது. ஹான் இனம் என்று சொல்லப்படும் அவ்விடப் பூர்வகுடி மக்கள் மட்டுமன்றி மங்கோலியர்கள், மஞ்சூரியர்கள் போன்றவர்கள் கூடப் பல நூறாண்டுகள் சீனப் பேரரசர்களாகத் திகழ்ந்து அதன் எல்லைகளைப் பெரிதும் விரிவடைய வைத்தனர். அப்போதிருந்த அண்டை நாடுகள் பலவும், வெவ்வேறு கால கட்டங்களில் சீனப் பேரரசருக்குக் கப்பம் கட்டின, பதிலுக்குச் சீனா அவர்களுக்கு வணிக உரிமை, பாதுகாப்பு, கல்வி, கலாச்சாரம் போன்ற பங்களிப்புகளைச் செய்தது. இன்றைய கொரியா, வியட்நாம், ஜப்பான் போன்றவை அதில் அடங்கும். சில சமயங்களில் சீனாவின் மேற்கிலுள்ள திபெத் பகுதியும், வட மேற்கிலுள்ள இன்றைய சின்ஜியாங் என்ற பகுதியும் கூட அவ்வாறே இருந்தன. இவ்விரண்டு பகுதிகள் தான் இன்றைக்கு நமக்கும் செஞ்சீனாவிற்கும் இடையிலான போர் மூளும் சூழ்நிலைக்குக் காரணம்.
1840களில் இருந்து மேற்கத்திய காலனித்துவ நாடுகள் பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவை வணிகப் போர்வையில் சீனாவுக்குள் நுழைந்து, சண்டையிட்டுத் தனிச் சலுகைகளைப் பெற்றன. இதில் அமெரிக்க, ஜெர்மனி, ரஷ்யா போன்ற நாடுகளும் இணைந்தன. பேரரசின் வலுவிழந்த நிலையைப் பயன்படுத்தி ஜப்பான் சீனாவின் பெரும் பகுதியைப் பிடித்தது. 1912ம் ஆண்டு 3000-ஆண்டுகள் தொடர்ந்த சீன மன்னராட்சி முடிவுக்கு வந்தது. குடியாட்சி அமைப்புத் தோன்றியது. 3000 ஆண்டுகளுக்கு மேலாக பேரரசர்களின் மன்னராட்சி முறையில் வாழ்ந்து பழகிவிட்ட சீனாவில் குழப்பம் உண்டாகியது. கம்யூனிஸப் புரட்சி ஏற்பட்டது, மா சேதுங், லியூ ஷாவொச்சி, லின் பியாவ் போன்ற புரட்சித் தலைவர்கள் தோன்றினார்கள். 1949ல் அவர்கள் ஆட்சியைக் கைப்பற்றி குவோமிண்டாங் என்று அழைக்கப்பட்ட (அதாவது ‘மக்கள் கட்சி’) ஆட்சியாளர்களைத் துரத்தி அடித்தார்கள். அவர்கள் அருகிலுள்ள தைவான் தீவில் தஞ்சம் புகுந்தனர். இன்றளவும் ROC என்றழைக்கப்படும் சீனக் குடியாட்சி நாடாக தைவான் இருக்கிறது. கம்யூனிஸ்டுகளால் கைப்பற்றப்பட்ட சீனா, மக்கள் குடியாட்சி சீனா, PRC, என்றழைக்கப்படுகிறது. அன்றிலிருந்து, தைவான் நாட்டைக் கைப்பற்ற சீனா பெரும் முயற்சி செய்தும் வருகிறது, அதற்கு முட்டுக்கட்டையாக அமெரிக்கா இருக்கிறது. அதனால் மா சேதுங், சூ என்லாய் போன்ற சீனத் தலைவர்கள் 1949யிலிருந்து அமெரிக்காவை இருபது ஆண்டுகளுக்கும் மேலாகக் கடுமையாக ஏசி வந்தனர். 1950ல் கொரிய யுத்தம் துவங்கியது. அதில் ஐ நா சபையின் ஆணையின் கீழ் அமெரிக்காவும் சக நாடுகளும் தெற்கு கொரியாவிற்கு ஆதரவாக வட கொரியாவின் படையெடுப்பை எதிர்த்தன. ரஷ்யாவின் உந்துதலாலும், ஆதரவாலும் செஞ்சீனப் படைகள் வட கொரியாவுக்கு ஆதரவாகக் களமிறங்கின. இறுதியில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டாலும் சீன-அமெரிக்க உறவு மேலும் மோசமடைந்தது. கம்யூனிசம், சோவியத் யூனியன் மற்றும் செஞ்சீனா மூலம் ஆசியாக் கண்டத்தில் பரவுவதைத் தடுக்க சீட்டோ (SEATO), சென்டோ (CENTO) போன்ற அமைப்புக்களை அமெரிக்கா உருவாக்கியது. ஏற்கெனவே ஐரோப்பாவில் நேட்டோ (NATO) அமைப்பை அமெரிக்கா மற்றும் சக நாடுகள் ஏற்படுத்தியிருந்தன. இவை அனைத்துமே ராணுவக் கூட்டமைப்புக்கள்தான். ஆனால், 1971ல் நிலைமை சீனாவிற்குச் சாதகமாக மாறிற்று.
சோவியத் யூனியனை ஆண்ட ஜோசப் ஸ்டாலினுக்கும், மா சேதுங்கிற்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம், இருவரும் கம்யூனிஸத் தலைவர்களாக இருந்தும். ஸ்டாலினுக்குப் பின் வந்த குருஷேவிற்கும், மாவிற்கும் அதைப் போன்ற பொருத்தமே அமைந்தது. கம்யூனிச சித்தாந்தமே பிளவுபட்டது. முடிவில்லாத துப்பாக்கி முனை வன்முறைப் புரட்சி ஒன்றையே மா சேதுங் கொள்கையாகக் கொண்டிருந்தார். 1969ல் சோவியத் படைகளை உஸூரி ஆற்றங்கரையில், எவ்வாறு கல்வான் ஆற்றங்கரையில் நமது படைகளை திடீரென்று முட்கம்பி பதித்த கட்டைகளால் இந்த ஜூன் மாதம் தாக்கினார்களோ அவ்வாறே, செஞ்சீனப் படைகள் தாக்கிக் கொன்றன. இரு நாடுகளுக்குமிடையான நட்பு முற்றிலும் முறிந்தது. அமெரிக்காவிற்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. அமெரிக்காவை அச்சுறுத்தி வந்த சோவியத் யூனியனை செஞ்சீனாவை வைத்து முறியடிக்க அது திட்டமிட்டது. சீனாவும் அதை விரும்பிற்று. செஞ்சீனாவின் அணு ஆயுதம், போர் விமானங்கள், ராணுவத் தளவாடங்கள் அனைத்துமே சோவியத் யூனியன் அளித்தவையே, ஆயினும் செஞ்சீனா கம்யூனிசத்திற்கு எதிரான முதலாளித்துவதுடன் கை கோர்த்தது. பன்னாட்டு உறவுகளை அலசுபவர்கள் இதை யதார்த்தவாதம் (Realpolitik) என்று குறிப்பிடுவார்கள். அதாவது, தன் நாட்டின், நாட்டினரின் வசி வளங்களுக்குப் பிறகே மற்றவையெல்லாம் என்றெண்ணும் மனப்பாங்கு. ஆங்கிலேயர்களிடம் இருந்து, அஹிம்சை முறையில் சுதந்திரம் பெற்ற நாமோ, பன்னெடுங்காலம் கற்பனைவாத (Idealpolitik) தத்துவதைப் பின்பற்றினோம். ‘ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகள்’ என்றெல்லாம் அணிசேராக் கொள்கையைக் கடைப்பிடத்த நம்மைச் சித்தரித்த செஞ்சீனாவோ தமது கொள்கைகளுக்கெல்லாம் முரணாக ஏகாதிபத்திய அமெரிக்காவுடன் உறவை ஆழமாக ஏற்படுத்திக் கொண்டது. கொள்கை முரண்பாட்டைப் பற்றியெல்லாம் அவர்கள் அப்போது கவலைப்படவில்லை, ஏனெனில் அவர்கள் குறிக்கோளை அடைய வேறு வழியில்லை என்பதையும் உணர்ந்திருந்தனர். நாமோ, இதற்கெல்லாம் பலமாக அஞ்சுகிறோம், ஆனால் சீனாவின் அணுகுமுறைகளையும் புகழ்கிறோம்.
1971ல் அமெரிக்காவும், செஞ்சீனாவும் தங்கள் சீர்கெட்ட உறவைப் புதுப்பித்துக்கொண்டன. அதன் ஒரு பகுதியாக, தைவானைத் தனி நாடக அங்கீகாரம் செய்ததை ரத்து செய்தது அமெரிக்கா. ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து தைவான் வெளியேற்றப் பட்டது. அந்த இடத்தில் செஞ்சீனா வந்தமர்ந்தது. ஐ.நா.பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராகவும் ஆகியது. ஆனாலும், அமெரிக்க-செஞ்சீன உறவுகள் செயற்பட 1979 வரை ஆயிற்று. ஆனால், 1979 முதல் அமெரிக்கா சீனாவின் தொழில் நுட்ப, விஞ்ஞான வளர்ச்சிக்குத் தங்கு தடையின்றி உதவி செய்தது. தனது மிக நட்பு நாடாகவும், தனது பாதுகாப்பு வளையத்தினுள் அமைந்த ஜப்பானையும் பெருமளவில் செஞ்சீனாவில் முதலீடு செய்ய வைத்தது. இன்றைய செழிக்கும் சீனாவின் வளர்ச்சிக்கு 1980களில் அமெரிக்காவும், ஜப்பானும் வித்திட்டதே பெரும் காரணம். நூறாண்டுகளுக்கும் மேலாக ஜப்பான் மீது தீராத வன்மம் கொண்டிருந்த செஞ்சீனாவும் அதை மறந்து ஜப்பானின் முதலீட்டை இரு கரங்கள் நீட்டி வரவேற்றது. யதார்த்தவாதத்தின் இன்னொரு பரிமாணம். அப்போதுதான், சோவியத் யூனியன், ஆப்கானிஸ்தான் நாட்டின் கம்யூனிஸ்டு அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க புரட்சியாளர்களை அடக்க அங்கே தனது படைகளை அனுப்பியது. வியட்நாம் யுத்தத்தில், தோல்வியைச் சந்தித்த அமெரிக்கா, அதற்குப் பழி வாங்க ஆப்கானிஸ்தானை சோவியத் யூனியனின் தோல்விக்களமாக மாற்ற செஞ்சீனாவின் உதவியை நாடியது. ‘கரடிக் கண்ணி’ என்றழைக்கப்படும் (Operation Bear Trap) போர்த்தந்திரத்தின் மூலம் 1989ல் சோவியத் யூனியன் படைகள் பெரும் பின்னடைவும், மிகுந்த ஆள் மற்றும் பொருட் சேதமும் ஏற்பட்டுத் திரும்பச் சென்றன. சோவியத் யூனியன் உடைந்தது. அது அமெரிக்காவின் ராஜதந்திரத்துக்கு மாபெரும் வெற்றி. சீனப் பொருளாதாரத்திற்கு உதவினால், சீனா தனது கம்யூனிஸக் கொள்கைகளையும், பொத்தி வைத்த பொருளாதாரத்தையும் துறந்து மேற்கத்திய ஜனநாயக நாடுகளைப் போல மாறிவிடும், அதன் அபாயம் பிற்காலத்தில் இருக்காது என்று அமெரிக்கா தப்புக் கணக்குப் போட்டுவிட்டது. ஆனால், சீனாவின் போர்திறஞ்சார்ந்த கலாச்சாரத்தை, அதன் 3000 ஆண்டு குறிக்கோள்களைக் கணக்கில் கொள்ளவில்லை. அவற்றை அடுத்துப் பார்ப்போம்.
சீனாவின் போர்திறஞ்சார்ந்த கலாச்சாரம் (Strategic Culture)
சீனர்கள் தங்கள் நாட்டை ‘இடை இராச்சியம்’ (Middle Kingdom) என்றே 3000 ஆண்டுகளாகக் குறிப்பிட்டுக்கொண்டுள்ளனர். ‘இடை இராச்சியம்’ என்றால் என்ன? சீனர்கள் நமக்கும் மேல் ‘அண்ட உலகம்’ (cosmic world) ஒன்றிருப்பதை நம்புகிறார்கள். இதைச் சுருக்கமாக, வசதிக்காக ‘சுவர்க்கம்’ என்றே வைத்துக் கொள்வோம். சீன நாடு சுவர்க்கத்திற்கும், இந்த பூமிக்கும் இடையில் இருப்பதாக நம்புகிறார்கள். அதனால் என்ன? என்னவென்றால், இந்த உலகம் தங்களின் மேலாண்மையின் கீழ் இயங்க வேண்டும், அதைத்தான் சுவர்க்கம் விரும்புகிறது, தாங்களே சிறந்தவர்கள், பேரரசர் சுவர்க்கத்தினால் உலகை ஆளத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஹான் இனத்தைச் சேராதவர்கள் ‘காட்டுமிராண்டிகள்’, ஹான்-இனக் கலாச்சாரம், மொழி இவற்றை அறிவதன் மூலமே இந்த உலகிலுள்ள மற்றவர்கள் உய்ய முடியும் என்பது அவர்களது நம்பிக்கை. சீனப் பேரரசின் அருகிருந்த நாடுகள் அனைத்துமே மிகச் சிறியவை, எனவே, அவை சீனாவைச் சார்ந்து பிழைக்கும் (vassal) அந்தஸ்தை உவந்தோ, உவக்காமலோ ஏற்றுக் கொண்டன. இன்றைய கம்யூனிஸச் சீனாவும் அதையே மற்ற நாடுகளிடமிருந்து எதிர்பார்க்கின்றது.
இவை போன்ற எண்ணங்களை நாம் போர்திறஞ்சார்ந்த கலாச்சாரம் என்று குறிப்பிடுகிறோம். இந்த எண்ணங்கள் சீனர்களின் மனதில் ஆழமாக வேரூன்றியவை. அதுவும் போக, இவை ‘சமுதாய எந்திரவியல்’ (social engineering) போன்ற அரசு முயற்சிகளினால் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகின்றன. இது மக்களிடம் ஒருமித்த கருத்தை உருவாக்குகின்றது. நாம் எதைச் செய்தாலும், அது இந்தக் கலாச்சாரத்துக்கு மாறுபடாமல் இருக்கிறதா என்று யோசித்துச் செய்யப் பொது மக்களைத் தூண்டுகிறது. ஒரு வித ஒழுங்குமுறைக்குள் மக்களைத் தன்னிச்சையாக அடைக்கிறது. மேலும், கிட்டத்தட்ட 3000 ஆண்டுகள் ஒரு தலைமையின் கீழ் வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள், கட்டளைகளைக் கீழ்ப்படிய மறுப்பதில்லை. இந்தியாவைப் போலல்லாமல், பொதுமை (homogeneity) சீனாவில் நிரவிக் கிடக்கிறது. அடக்குமுறைக் கம்யூனிஸம் எளிதில் மக்களைக் கட்டுக்குள் வைத்துள்ளது. ஏகாதிபத்திய பேரரசு ஆட்சி முறைகளை ஒழிக்கப் பிறந்த கம்யூனிச சித்தாந்தத்தைத் தலைகீழாகத் திருப்பி, சீன ஏகாதிபத்தியத்தை உலகெங்கிலும் நிறுவும் முயற்சியில் செஞ்சீனாவின் புதிய பேரரசரான சி ஜின்பிங் முயற்சிக்கிறார். இதற்குத் தேவையான எடுக்கும் முயற்சிகளை ‘சீனச் சிறப்பியல்புகளுடன் அமைந்த சமதர்மம்’ (Socialism with Chinese Characteristics) என்றும் கூறிக்கொள்ளுகிறார். இதற்கு மக்கள் ஒத்துழைப்பு வேண்டும். நாடு சில பல பின்னடைவுகளைச் சந்திக்க வேண்டி வரும். அதைச் சரிக்கட்ட ‘சீனக் கனவு’ ஒன்றைச் சீன மக்களுக்குக் காட்டியிருக்கிறார் அதிபர் சி ஜின்பிங். அதன்படி 2050 ம் ஆண்டுக்குள் உலகின் மிக வளம் கொழிக்கும் நாடாகவும், உலகின் தலைசிறந்த ராணுவ பலம் வாய்ந்த நாடாகவும் சீனா மாற்றம் காணும் என்பதே அந்தக் கனவு. அந்தக் கனவைப் படிப்படியாக அமைக்கும் ஆண்டுகளையும் வரைப்படுத்தி இருக்கிறார். 2021ம் ஆண்டின் குறிக்கோளை சீனா எட்டிக்கொண்டிருக்கிறது. எனவே ‘சீனச் சிறப்பியல்புகளுடன் அமைந்த சமதர்மம்’ என்பது உலகை செஞ்சீனக் குடையின் கீழ்க் கொண்டுவரும் முயற்சி மட்டுமன்று, அதற்கு உறுதுணையாக சீனர்களின் ஏகோபித்த, எதிர்ப்பற்ற ஆதரவைப் பெரும் முயற்சியுமாகும். அதாவது, பன்னாட்டுக் கொள்கையை உள்நாட்டுக் கொள்கையுடன் முற்றிலும் ஒன்றிணைத்துக் கட்டப்பட்ட ஏகாதிபத்திய விவரணம் (narrative).
இந்திய – சீன உறவு
கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளாக பண்டைய பாரதத்திற்கும், சீனாவிற்கும் இடையில் மத மற்றும் வணிக உறவுகள் இருந்துள்ளன. அவை வடக்கு, கிழக்கு மற்றும் தென் பாரதத்திலிருந்து தரை மற்றும் கடல் மார்கங்கள் மூலமாக சீனாவுடன் நடைபெற்றன. இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானியப் படைகளை எதிர்த்துப் போரிட்ட சீன ராணுவத்தினருக்கு உதவ இந்திய தேசியக் காங்கிரஸ் Dr. கோட்னிஸ் என்ற ஒரு மருத்துவரை அங்கு அனுப்பியது. சீன அரசு அவருக்கு மிக உயர்ந்த அங்கீகாரம் அளித்தது. சுதந்திரம் பெற்ற பின் ‘இந்தியர்-சீனர் சகோதரர்’ எனும் கோஷம் முழங்கிற்று. பஞ்சசீலம் என்றழைக்கப்படும் ஐந்து கொள்கைகளைக் கடைப்பிடிக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. ஆனால், செஞ்சீனாவைப் பொறுத்த வரை, இவையெல்லாம் வெறும் ‘புகைத் திரைகளே’ (smokescreen) என்பதை நாம் உணரவில்லை. அங்குதான் நமது ‘கற்பனைவாத’, வெகுளித்தனமான பன்னாட்டு உறவு அணுகுமுறை நமக்குப் பெருஞ்சரிவை ஏற்படுத்தியது.
1947ல் நாம் சுதந்திரம் பெற்ற இரண்டு மாதங்களுக்குள்ளேயே போரைச் சந்திக்க வேண்டிய ஒரு சூழ்நிலைக்கு நாம் தள்ளப் பட்டோம். ஜம்மு காஷ்மீரைத் தனதென்று சொந்தம் கொண்டாடி பாகிஸ்தான் நம் மீது போர் தொடுத்தது, அதன் 50 சதவிகித நிலப்பரப்பை இன்று வரை பிடித்தும் வைத்துக் கொண்டுள்ளது. அதில் பெரும் பகுதி கில்கிட் -பல்டிஸ்டான் என்று சொல்லப்படும் பகுதி. அது நம் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு வடக்கே அமைந்துள்ளது, அதன் கிழக்குப் பகுதி சின்ஜியாங் என்று தற்போது சீனாவின் பிடியிலுள்ள கிழக்கு துர்கிஸ்தான் நிலப்பரப்பாகும். 1949ல் செஞ்சீன ராணுவம் அதைக் கைப்பற்றியது. அதற்குத் தெற்கே அமைந்துள்ள பகுதிதான் திபெத். தனி தேசமாகவும், ஒரு இருநூறு ஆண்டுகள் சீனப் பேரரசைத் தோற்கடித்த வலிமைபெற்றதாகவும், பின் அவ்வப்போது சீனப் பேரரசுக்குக் கப்பம் கட்டும் நாடாகவும், சீனாவை ஆண்ட மங்கோலியர்களுக்குப் புத்த மதப் பீடமாகவும் (இன்றளவும்) திகழும் திபெத்தை 1951ல் செஞ்சீனா ராணுவத் துணையுடன் பல்லாயிரக் கணக்கான புத்த பிக்குக்களைக் கொன்று கைப்பற்றியது. திபெத் பௌத்தர்களின் அரசியல் மற்றும் மத குருவான தலாய் லாமா நம் நாட்டிற்குள் தஞ்சம் புகுந்து இன்றளவும் அவர்தம் சீடர்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். சின்ஜியாங், திபெத் இரண்டிற்கும் இடைப்பட்ட நம் நாட்டுப் பகுதிதான் கிழக்கு லடாக். செஞ்சீனாவைப் பொறுத்தவரை, இந்த இரண்டு பகுதிகளும் முழுமையாக இணையாததாலும், அவற்றில் பிரிவினை வாதம் தொடர்ந்து இருப்பதாலும், அவற்றில் இன்றியமையாத நீர்வளங்களும் (சிந்து, பிரம்மபுத்ரா, மீகாங், சல்வீன்,ஐராவதி போன்ற மிகப் பெரிய ஆறுகள் திபெத்தில் உருவாகின்றன. மற்றும், ஏராளமான பனிக்கட்டிப் பாளங்களைக் கொண்டிருப்பதால் (glaciers) வட, தென் துருவங்களை அடுத்து மூன்றாவது துருவமாகவும் திபெத் கருதப்படுகிறது), கனிம வளங்களும் (உலோகங்கள், எண்ணெய், எரிவாயு) நிறைந்திருப்பதாலும், செஞ்சீனா ராணுவ அடக்குமுறையைக் கையாண்டு அவர்களைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது. எனவேதான். 1963ல் பாகிஸ்தானுடன் எல்லை ஒப்பந்தம் செய்து கொண்டு நமது கில்கிட் பகுதிக்குச் சொந்தமான 5000 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள ஷாக்ஸ்கம் பள்ளத்தாக்கு பகுதியை செஞ்சீனாவின் பாதுகாப்பிற்காகத் தனதுடமையாக்கிக் கொண்டது. அதை போலவே நமது லடாக்கையும் கைப்பற்ற முனைந்தது 1962ல், அதில் பெரும் வெற்றியும் கண்டது. முதலில், சின்ஜியாங்கையும், திபெத்தையும் இணைக்கும் பாதையைக் கிழக்கு லடாக்கில் ஒரு மூலையில் 1951ல் நமக்குத் தெரியாமல் கட்டத் தொடங்கியது, பின்னர் அதன் பாதுகாப்புக்கு தேவை என்று இடைத்தாங்கு (buffer) பகுதிகளாக நமது லடாக்கை மேலும் ஆக்கிரமித்தது. பின்னர் அப்போது NEFA என்றழைக்கப்பட்ட தற்போதைய அருணாச்சலப் பிரதேசம் தனது என்று சொந்தம் கொண்டாடியது. 1914ல் அன்றைய ஆங்கிலேய அரசுக்கும், திபெத், சீன அரசுகளுக்கும் இடையே செய்யப்பட்ட மக்மஹோன் எல்லைக்கோட்டை திடீரென நிராகரித்தது. இவையே, நமக்கும் செஞ்சீனாவிற்குமிடையிலான எல்லைப் பிரச்சினை, சுருக்கமாக.
சரி, நால்வர் அணியில் உள்ள மற்ற மூன்று நாடுகளுக்கும், செஞ்சீனாவிற்கும் என்ன பிணக்கு ? அடுத்த பகுதியில் பார்ப்போம்.
(சுப்ரமண்யம் ஸ்ரீதரன், படிப்பின் மூலமும், வேலையின் மூலமும் ஒரு கணினி வல்லுநர். பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பல்லாண்டுகள் பணியாற்றிய போது, அதன் உலக சேவை வழங்கும் மையத்தின் சில பிரிவுகளுக்குத் தலைமைப் பொறுப்பேற்றார். இந்தியாவின் போர்திறஞ்சார்ந்த பாதுகாப்பு, இந்தியாவின் அண்டை நாடுகளுடனான உறவுகள், குறிப்பாக சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றைக் கூர்மையாக இருபத்தைந்தாண்டுகளாகக் கவனித்து வருபவர். இந்தியாவின் பாதுகாப்பை முதன்மைப்படுத்தி விவாதிக்கும் முன்னணி வலைத்தளம் ஒன்றின் செயலாட்சியராக இருக்கிறார். சென்னை சீன ஆய்வு மையத்தின் உறுப்பினர். Views expresses are personal.)
Komentáře