top of page

சீனாவின் மூளை இயக்க கட்டுப்பாட்டு “ஆயுதங்கள்”: கர்னல் ஆர் ஹரிஹரன் (Tamil)


Image Courtesy: The New York Times


Article 05 / 2023


சீனா மூளைச்சலவையில் கைதேர்ந்த நாடு என்பது பலரும் அறிந்ததே. Brain Washing (மூளைச் சலவை) என்ற ஆங்கிலச் சொல்லே முதன் முதறையாக 1950-ல் கொரியப் போரின் போது உபயோகிக்கப் பட்டது. அது சீன கம்யூனிஸ்ட் அரசு மக்கள் மனதை அரசுக்கு சாதகமாக மாற்ற உபயோகிக்கும் செயல்நுட்பத்தை குறிப்பதாகும்.. தற்போது சீன அரசின் ஆளுமையில் அந்த மூளைச்சலவை செயல்நுட்பம் வளர்ச்சி பெற்று மூளையின் இயக்கத்தையே கட்டுபடுத்தும் ஆயுதங்களாக மாறி வருகிறது.

சீன அரசு பொது மக்களை கண்காணிப்பதை எளிதாக்க "ஒரு நபர், ஒரு கோப்பு" என்ற மென்பொருளை சில ஆண்டுகளாக உபயோகித்து வருகிறது. முக்கியமாக, சின்ஜியாங் தன்னாட்சி பகுதியில் உய்குர் இன மக்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அந்த மென்பொருள் பயன்படுத்தப் படுகிறது. ஏற்கனவே, முக அடையாளம் காட்டும் மென்பெருளை பெருமளவில் உபயோகித்து சீன அரசு பொதுமக்களிடையே அரசுக்கு எதிரான சந்தேகத்திற்குரிய நபர்களை கண்டு அறிந்து வருகிறது..முக அடையாளம் காட்டும் தொழில்நுட்பம் உலகெங்கும் பரவி தற்போது உபயோகத்தில் உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 6-ந்தேதி வெளியான ஒரு செய்தியின் படி கொரோனா மகாமாரி தாக்கிய காலகட்டத்தில் முகக்கவசம் அணிந்த நபர்களை அடையாளம் காணும் நிறுவனத்தில் சீன மென்பெருள் இன்ஜினியர்கள், பணிபுரிந்து வருவது தெரியவந்தது.

மேலும், சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் ஹெஃபி நகரில் உள்ள ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனம், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் விசுவாசத்தை அளவிடக்கூடிய மென்பொருளை உருவாக்கியுள்ளதாக ஒரு VOA (வாய்ஸ் ஆப் அமெரிக்கா) செய்தி கூறுகிறது. அந்த செய்தியின் படி, 2021-ம் ஆண்டின் பிற்பகுதியில், ஹெனான் மாகாணத்தில் உள்ள அதிகாரிகள் "சந்தேகத்திற்குரிய" பத்திரிகையாளர்கள், வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பெண்கள் ஆகியோரை கண்காணிக்க அதேபோன்ற அமைப்பைத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

மேலும், ஷாங்காயில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள், செயற்கை நுண்ணறிவு தயாரித்த வழக்குரைகளை உபயோகிப்பதாகக் கூறப்படுகிறது, அத்தகைய வழக்குரைகளை கிரெடிட் கார்டு மோசடி மற்றும் வீதி சச்சரவு ஆகிய எட்டு கிரிமினல் குற்ற வழக்குகளில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய உபயோகிக்கப்படும். .. “தி பேப்பர்” என்ற சீன ஆன்லைன் செய்தித்தாள் சிச்சுவானில் உள்ள ஒரு கம்யூனிஸ்ட் கட்சி பள்ளி 2017 ஆம் ஆண்டிலேயே "ஸ்மார்ட் ரெட் கிளவுட்" என்ற செயலியை உருவாக்கியுள்ளதாக கூறுகிறது. ஏற்கனவே அந்த செயலியை உபயோகித்து, அரசியல் கல்விக்கான கட்சி உறுப்பினர்களின் எதிர்வினையை கண்காணிக்கவும் மற்றும், அவர்களின் விசுவாசத்தை "கணக்கிடவும்" முடிந்தது என்று அந்த செய்தி கூறுகிறது. சீனாவின் தொடர்ந்து முன்னேறி வரும் கண்காணிப்பு அமைப்புகளின் செயல்பாட்டால் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோர் பாதிக்கப் பட்டுள்ளார்கள். ஏற்கனவே, அவர்கள் இண்டர்நெட் தொடர்பு சாதனங்களையும் சமூக வலைதளங்களையும் உபயோகிப்பதில் பல்வேறு தடங்கல்கள் அனுபவித்து வருகிறார்கள். அரசின் கண்காணிப்பு அமைப்புகள் செயற்கை நுண்ணறிவின் உபயோகத்தை அதிகரித்து வருவது அவர்களிடையே மேலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மனித உரிமை வழக்கறிஞர்களில் ஒருவர் கூற்றின்படி "துல்லியமான ஆனால் தீவிர" கண்காணிப்பை மேம்படுத்துவதற்காக சீனாவின் காவல்துறை தனது காவலில் உள்ளவர்களின் கண்கள், கைரேகைகள் மற்றும் சிறுநீர் மாதிரிகளை சேகரித்து கைதிகளின் ‘பயோ மெட்ரிக் பதிவுகளை சட்டவிரோதமாக செயல்படுவதாக கூறியுள்ளார். சீனா தனது கண்காணிப்பு செயல் முறைகளை செயற்கை நுண்ணறிவின் மூலம் விரிவபடுத்துவதை ஆய்வு செய்த மார்டின் பெரேஜா என்ற அமெரிக்க பொருளாதார உதவிப் பேராசிரியர் இது சீனாவின் எதேச்சாதிகர அரசியலின் தாக்கத்தை மேலும் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும், எதேச்சாதிகாரப் போக்குடன் செயல்படும் சீனாவின் நேச நாடுகளுக்கும் இத்தகைய கண்காணிப்பு முறைகளை ஏற்கனவே ஏற்றுமதி செய்து வருகிறது. அந்த நாடுகள் இடையேயும் அதன் தாக்கத்தின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று பெரேஜா கூறியுள்ளார். இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் இத்தகைய சீன கண்காணிப்பு முறைகள் எத்தகைய பாதிப்பை இந்தியாவுக்கு ஏற்படுத்தக் கூடும் என்பது நமது பாதுகாப்பு அமைப்புகள் சிந்திக்க வேண்டிய விஷயம். மேலும், சீனாவின் போலீஸ் மற்றும் குற்றவியல் செயல்பாடுகளில் முன்னேற்றம் காண, 21 செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இத்தகைய நிறுவனங்கள் அரசின் காண்ட்ரேக்ட்டுகளை பெறும் போது, அவர்களுக்கு பொது மக்களின் கண்காணிப்பு விவரங்களையும் பெற்றுக் கொள்வார்கள். மேலும், அந்த நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தை விரிவாக்க அரசாங்கத்துக்கு தயார் செய்த அந்த அல்காரிதம்களை உபயோகிக்கும் ஆபத்தும் இருக்கிறது என்று பெராஜா VOA ஊடக நிறுவனத்திடம் கூறியுள்ளார். . உலகில் பல நாடுகளில் சீனாவின் கண்காணிப்பு பயன்பாட்டு முன்னேற்றத்தை கண்டு அத்தகைய முறைகளை தாங்களும் உபயோகிக்க தொடங்கியுள்ளனர் அது மட்டும் அல்லாமல், அத்தகைய பயன்பாட்டின் ஆராய்ச்சியிலும் அமெரிக்க ஆய்வு நிறுவனங்கள் ஈடுபாடு காட்டத் தொடங்கியுள்ளன.

சென்ற ஆண்டு டிசம்பர் மாதம், அமெரிக்க அரசின் வர்த்தக பிரிவு 12 சீன ஆய்வு நிறுவனங்கள் மீது காரணம் ஏதும் கூறாமல் தடை விதித்தது. அவற்றில் பெய்ஜிங்கில் உள்ள சீன ராணுவ மருத்துவ அறிவியல் கூடமும் (Academy of Military Medical Sciences) அடங்கும். வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை நிறுவன செய்தி அமெரிக்க அரசின் 2019-ம் ஆண்டு ஆவணங்களில் சீன அரசின் மூளையின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பதைப் பற்றிய சில திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்ததாக கூறுகிறது.

இத்தகைய ஆய்வுகளின் குறிக்கோள் மூளையின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் “ஆயுதங்களை” உபயோகித்து போர்முனையில் எதிரிகளின் மூளையை இயங்கவிடாமல் செய்வதே ஆகும். வருங்கால போர்முனைகளில் மூளை கட்டுப்பாட்டு “ஆயதங்கள்” மற்றும் அணுகுமுறைகள் நமது போர்படைகளில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதைப் பற்றி நாம் இப்போதே சிந்திக்க வேண்டும். (கர்னல். ஆர். ஹரிஹரன், தெற்காசிய ராணுவ நுண்ணறிவுத் துறை வல்லுனர். மேலும் அவர் சென்னை சீன ஆய்வு மையத்தின் முக்கிய அங்கத்தினர் ஆவார் Email haridirect@gmail.com Website: https://www.colhari.info)

92 views0 comments

Kommentare


LATEST
bottom of page