கர்னல் ஆர் ஹரிஹரன்
Image Courtesy: The Guardian
Article: 41/2023
சீனா இந்தியாவைப் போல் பழம்பெரும் கலாசாரம் வாய்ந்த நாடு. சீன மொழியை கற்பதுஎளிதல்ல. இந்தியா மேற்கத்திய காலினி ஆதிக்கத்தின் கீழ் 200 ஆண்டுகள் இருந்ததால் உலகுக்கு இந்தியாவை ஒரளவு புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் சீனாவை புரிந்து கொள்வதுஅவ்வளவு எளிதல்ல. ஹங்கேரிய நாட்டு பாதிரியான லாஸ்லோ லடானி செஞ்சீனாவை நாம் புரிந்து கொள்ள செய்த சேவை மகத்கதானது. அவர் கொமிண்டாங் அரசு சீனாவை ஆண்ட போது ஒன்பது ஆண்டுகள் சீனாவில் கல்வி கற்றார். அவர் 1949-ல், கம்யூனிஸ்ட் சீன அரசால் சீன நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர், 1982 ஆம் ஆண்டு வரை அவர் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங் காலனியில் "சீனச் செய்தி ஆய்வு மையம்" என்ற அமைப்பை ஏற்படுத்தி நடத்தினார். அந்த கால கட்டத்தில், கம்யூனிஸ்ட் சீனாவில் என்ன நடக்கிறது என்பதை எளிதில் அறிய முடியாது. சீன மொழியில் பிரசுரமாகும் சீனாவின் செய்திகளை அலசி, பகுப்பாய்வு செய்து லடோனி அவற்றை ஆங்கிலத்தில் பிரசுரித்தார். சீன செய்தித்தாள்கள், ஆவணங்கள் மற்றும் வானொலி ஒளிபரப்புகளை நம்பி, மாவோவின் சாதனைகளைப் பற்றிய பிரச்சாரத்தை மற்றவர்கள் விழுங்கும்போது, செஞ்சீனாவில் நடந்த நிகழ்வுகளை துல்லியமாக ஆய்ந்து விளக்கம் அளித்தார்.
லடானி தனது கடைசி பதிப்பில், சமகால சீன அரசியலை சூழ்ந்துள்ள புகை மண்டலத்தின் ஊடே உண்மையை தெரிந்து கொள்ள முயற்சிப்பவர்களுக்கு வழிகாட்டும் 'பத்து கட்டளைகள்' பட்டியலை அச்சிட்டார்:
1. சுதந்திர சமுதாயத்தில் வாழும் எவருக்கும் ஒரு ராணுவ படைப்பிரிவு போன்ற சீன கம்யூனிஸ்ட் சமூகத்தின் வாழ்க்கையைப் பற்றிய முழுமையான புரிதல் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
2. சீன கண்ணாடிகள் மூலம் செஞ்சீனாவைப் பாருங்கள். அதற்கு மாறாக வெளி நாட்டு பார்வையில் நீங்கள் அதைப் பார்த்தால், சீன நிகழ்வுகளை உமது சொந்த பிரச்சனைகளின் அடிப்படையில் மட்டுமே புரிந்து கொள்வீர்கள்.
3. மற்ற கம்யூனிஸ்ட் நாடுகளைப் பற்றி ஏதாவது கற்றுக்கொள்ளுங்கள் (வியட்நாம், வட கொரியா ஆகிய கம்யூனிஸ்ட் நாடுகள் மட்டுமே எஞ்சியிருப்பதால் குறைவான பொருத்தம் மட்டுமே கிடைக்கலாம். இருந்தாலும் கடந்தகால வரலாறு ஓரளவு துணைபுரியும்).
4. மார்க்கசியத்தின் அடிப்படைக் கொள்கைகளைப் படிக்கவும்.
5. மார்க்கசிய சமுதாயத்தில் உபயோகிக்கப் படும் வார்த்தை பிரயோகம் மற்றும் சொற்கள் மற்ற இடங்களில் இருப்பதைப் போல அதே பொருளைக் கொண்டிருக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
6. உங்கள் பொது அறிவை நினைவு கொள்ளுங்கள்: சீனர்கள் சீனர்களின் குறிப்பிட்ட குணாதிசயங்களைக் கொண்டிருக்கலாம், ஆனால் அவர்கள் மனிதர்கள், எனவே மனிதர்களின் இயல்பான எதிர்வினைகளை அவர்கள் கொண்டுள்ளனர்.
7. மக்கள், பிரச்சினைகளை விட முக்கியமானவர்கள் அல்ல; ஆனால் அவர்கள் ஒருவேளை அதிகமாக இருக்கலாம். ஆகவே அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, பதவியில் இருக்கும் குழு, எதிர்ப்பவர்களின் திட்டத்தை ஏற்கலாம்.
8. உங்களுக்கு எல்லா பதில்களும் தெரியும் என்று நம்பாதீர்கள். சீனா பதில்களை வழங்குவதை விட அதிகமான கேள்விகளையே எழுப்புகிறது.
9. உங்கள் நகைச்சுவை உணர்வை இழக்காதீர்கள். சீனாவின் படைமுறை அழுத்தம் மிகவும் தீவிரமானது, ஆகவே அதை மிகவும் தீவிரமாக நீங்கள் எடுத்துக்கொள்ள முடியாது.
10. எல்லாவற்றிற்கும் மேலாக, சிறிய அச்சைப் படியுங்கள்.
மேலும் சீன ஆவணங்கள் மற்றும் அறிக்கைகளை கவனமாக படித்து சொல்லாட்சிக்கும், யதார்த்தத்திற்கும் இடையே உள்ள இடைவெளியை நாம் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக உணர்ச்சிகரமான விஷயங்களில். அதிபர் ஷீ-இன் வார்த்தைகளில், பத்திரிகைகளுக்கு 'பார்ட்டி' என்ற குடும்பப்பெயர் உண்டு.
கொள்கைகளின் துணிச்சலான அறிவிப்புகள் செயலில் விளையாமல் போகலாம் அல்லது ஆங்கில தினசரியான பீப்பிள்ஸ் டெய்லி யில் தோன்றாமல் போகலாம். ஆகவே, ஒரு முக்கிய பேச்சு அல்லது அறிக்கையை கடந்த காலங்களில் இதே போன்ற நிகழ்வுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது எப்போதுமே புத்திசாலித்தனமான செயலாகும்.
சீன யோசனை அல்லது அவர்கள் உபயோகிக்கும் சூசகமான மொழி உண்மையில் புதியதா? அப்படி இருக்கலாம், ஆனால் அதே வார்த்தைகள் கடந்த ஆண்டு தேசிய மக்கள் பேரவை (NPC எனப்படும் சீன பாராளுமன்றம்) அறிக்கையிலோ அல்லது ஒரு தசாப்தத்திற்கு முந்தைய அதிபர் ஹூ ஜின்டாவோவின் உரைகளில் ஒன்றிலோ தோன்றிய இருக்கக்கூடும். கடந்த காலங்களில் உள்ளடக்கப்பட்ட தலைப்புகளில் வேறுபாடுகள் இருந்தால், அவை எதைக் குறிக்கலாம் என்பதைக் கவனியுங்கள். ஒரு 'புதிய சகாப்தம்' அல்லது 'புதிய வளர்ச்சி மாதிரி' பற்றி ஷீ பேசும் அனைத்திற்கும், கடந்த காலத்துடன் கணிசமான ஒற்றுமை உள்ளது.
ஒரு பேச்சு அல்லது அறிக்கையில், 'சில சிக்கல்கள் உள்ளன' பகுதியைப் பாருங்கள்: இது பொதுவாக 'நாங்கள் நன்றாகச் செய்யவில்லையா' என்பற பகுதியை விட அதிகமாக வெளிப் படுத்துகிறது. கட்சி அரசியல் மற்றும் சீன மொழி இரண்டுமே, கட்சி முழக்கங்களுக்கும் வாசகங்களுக்கும் தங்கள் தனித்தன்மையை அளிக்கின்றன.
வாக்கியவியல் அல்லது வாசகம் முக்கியத்துவம் வாய்ந்தது. கோஷங்கள் என்பது சித்தாந்தம், கொள்கை அல்லது பிரச்சாரத்தின் சுருக்கம். எடுத்துக்காட்டாக, நவம்பர் 2021 இன் ஆறாவது பிளீனத்திலிருந்து, 'இரண்டு நிறுவனங்கள்' என்ற வார்த்தைகள் அடிக்கடி குறிப்பிடப்படுகின்றன.
ஷீ-யை கட்சியின் மையமாகவும், 'புதிய சகாப்தத்திற்கான ஷீ யின் சிந்தனை' யை சித்தாந்தம் மற்றும் வழிகாட்டுதலின் மையமாகவும் நிறுவுவது, ஷீயின் ஆளுமை அதிகாரத்தை கட்டமைக்கும் செயல்முறையின் ஒரு பகுதியாகும். இது இந்த ஆண்டு கட்சி காங்கிரஸில் உறுதிப்படுத்தப் படுத்தப்பட்டது.
சில வார்த்தை பிரயோகங்கள் அல்லது கட்சியின் அவசியமான பிரமுகர் பெயர்கள் இல்லாமல் இருந்தால் அதற்கு முக்கிய காரணங்கள் இருக்கலாம். அவை ஒரு வேளை சித்தாந்த அடிப்படை மாற்றம் அல்லது அந்த பிரமுகர் அரசியல் சிக்கலில் சிக்கியிருக்கலாம் என்ற ஊகம் மிகைப்படுத்தப்பட்டதா என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
அடிப்படைகளைப் புரிந்துள்ள சீனாவின் மிகவும் மாறுபட்ட அரசியல் சித்தாந்த அடிப்படயின் அரசியல் அமைப்பை புரிந்து கொள்வது அவசியம்.
குறிப்பாக புரிந்து கொள்ள வேண்டியவை;
· ‘ஆலோசனை லெனினிச அரசு’ (Consultative Leninist State) என்றால் என்ன? லெனினிஸ்ட் சித்தாந்தத்தில், அரசாங்கம் மற்றும் பிற அமைப்புகளுடனான கட்சியின் உறவைப் புரிந்துகொள்வது முக்கியம். உதாரணமாக, ஷீயின் வார்த்தைகளில் ‘கட்சி எல்லாவற்றையும் வழிநடத்துகிறது’. என்று சொன்னால், அதைப் புரிந்து கொள்ள ஐக்கிய முன்னணி மற்றும் சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டு அமைப்பு பற்றிய புரிதல் தேவை.
· கட்சி மற்றும் அரசாங்கத்தின் ஐந்து நிலைகள் (மாகாண, நகரம்/மாநிலம், மாவட்டம், நகரம் மற்றும் கிராமம்) மற்றும் அவற்றின் அதிகாரங்கள் என்ன என்ற புரிதல் தேவை.
· கட்சி ஷீயின் கீழ் எவ்வாறு செயல்படுகிறது மற்றும் கட்சி உறுப்பினர் ஆக செயல்படுவது எவ்வாறு என்று தெரிந்து கொள்வது அவசியம்.
சீன கம்யூனிஸ்ட் கட்சி நாட்டின் ஆட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் எப்போதும் செயல்படுகிறது. அதை நியாயப்படுத்த ஆறு காரணங்களை காட்டுகிறது;
· வளர்ந்து வரும் செல்வம்
· உலக மையத்தில் சீனவுக்கான விசேஷ அந்தஸ்து
· நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு
· சீன கலாசாரத்துக்கு மரியாதை
· மிகச்சிறந்த ஆட்சி முறை
· அதிகரித்து வரும் சமத்துவமின்மை மற்றும் மாறிவரும் இயற்கை சூழ்நிலையின் பாதிப்பு ஆகியவை அடங்கும்.
மேற்கண்ட ஆறு காரணிகளின் அடிப்படையிலேயே சீனாவின் வெளியுறவுக் கொள்கை இயங்குகிறது. சீன வெளி உறவு எப்போதும் உள்நாட்டில் அது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் இயங்கினாலும், அதன் அடிப்படை கருத்து வெளி உலகின் நிகழ்வுகள் எவ்வாறு கம்யூனிஸ்ட் அரசின் அங்கீகாரத்தை மக்களிடையே பாதிக்கும் என்பதேயாகும். இதை புரிந்து கொள்ள சீனாவின் சரித்திரமும் அதில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சியைப் பற்றிய ஞானமும் அவசியம்.
இதை படித்த பின்பு, மற்ற சீன விமர்சகர்களை முழுமையாக ஏற்றுக் கொள்ளாமல், உங்களுடைய பார்வையில் ஏதாவது மாற்று கருத்துக்கள் தோன்றினால் அவற்றை புறக்கணிக்காதீர்கள்.
[கர்னல் ஆர் ஹரிஹரன் ஓய்வு பெற்ற ராணுவ நுண்ணறிவுத்துறை அதிகாரியாவார். அவர் அத்துறையின் தெற்காசிய நிபுணர் ஆவார்.]
Comentarios