top of page
Writer's pictureupSpark Technologies

இந்தியா-சீனா எல்லைத் தகராறு மோடி-ஷீ சந்திப்பால் தீருமா?; கர்னல் ஆர் ஹரிஹரன்

Image Courtesy: Wikipedia Commons

Article Courtesy:  தினமலர்

Article 60/2020

பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷீ ஜின்பிங்கும், நவம்பர், 17ல், ரஷ்யா தலைமையில் நடக்கவிருக்கும், ‘ப்ரிக்ஸ்’ என்ற, பிரேசில், ரஷ்யா, சீனா, இந்தியா, தென் ஆப்ரிக்கா ஆகிய நான்கு நாடுகளின் கூட்டமைப்பு தலைவர்கள் சந்திப்பின் போது, நேரடி பேச்சு நடத்துவார் என, செய்திகள் வெளியாகி உள்ளன.

அந்த சந்திப்பு, வீடியோவில் நிகழும் பேச்சுவார்த்தையானாலும், லடாக்கில், ஜூன், 15-ல் கல்வான் தாக்குதலுக்கு பின், முதன் முதலாக இரு தலைவர்களும் நடத்தும் நேரடி பேச்சாகும். இருவரும் ஏற்கனவே, ஆறு ஆண்டுகளில், 18 முறை சந்தித்துள்ளனர். அதனால், இருவரும் மற்றவர் மனநிலையை ஓரளவு புரிந்து கொண்டு, அதற்கேற்ற உத்தியுடன் செயல்படுவர் என, நம்பலாம். மேலும், இருவரின் பேச்சு எந்த மட்டில் வெற்றி பெரும் என்பதை, சந்திப்புக்கு முன்னால், இரு நாடுகளும் முன்னெடுக்கும் நல்லிணக்கத்துக்கான அறிகுறிகள் வாயிலாக கணிக்கலாம். அப்படி பார்த்தால், கடந்த மாதம், ரஷ்யாவின் தலைமையில், ‘ப்ரிக்ஸ்’ நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பில், இந்திய – சீன பதற்ற நிலையை குறைக்க, ஐந்து அம்ச அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என, வேண்டுகோள் விடப்பட்டது, ஒரு நல்ல முயற்சியே. அதற்கு, இரு நாடுகளும் கொள்கை அளவில் சம்மதித்தன. ஆனால், இதுவரை அதை செயலாக்குவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.

பதில் கூறுவது எளிதல்ல

ஆதலால், நடக்கப் போகும் சந்திப்பு, இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள புகைச்சலை தீர்த்து, உறவின் வருங்காலத்தை நிர்ணயிக்க கூடிய முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுமா? இந்தக் கேள்விக்கு பதில் கூறுவது எளிதல்ல. ஏனெனில், இரு நாடுகளிலும் பெரும்பாலான மக்கள், இந்தப் பிரச்னை எல்லையை கடந்து, தேசிய மான பிரச்னையாக கருதுகின்றனர். இந்தியா ஜனநாயக நாடு; ஆகவே, மக்களின் உணர்ச்சிகளையே அதன் வெளியுறவு பிரதிபலிக்கிறது. அதை மனதில் வைத்தே, பிரதமர் மோடி செயல்பட முடியும். சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரும் தலைவராக கருதப்படும், ஷீ ஜின்பிங், தன் இஷ்டப்படி, முடிவு எடுக்கும் அதிகாரம் உடையவர். அதற்கு ஆதரவாக செயல்பட, கட்சியின் மத்திய தலைமையில், பல மாற்றங்களை ஏற்கனவே மேற்கொண்டவர்.

ஆகவே, பிரதமர் மோடியை விட, முடிவெடுக்கும் சுதந்திரம், அவருக்கு அதிகமாகவே உள்ளது. இருந்தாலும், உலக அளவில், அவர் எடுத்த பல நிலைப்பாடுகள், முக்கியமாக, ‘கோவிட் வைரஸ்’ பிரச்னை மற்றும் பெரும் பொருளாதார பின்னடைவு, தென் சீன கடலில் சீனப்படைகள் காட்டி வரும் அழுத்தம், ஹாங்காங் மற்றும் தைவான் நாட்டில் ஏற்படுத்தியுள்ள பதற்றமான சூழ்நிலை ஆகியவை, சீனாவுக்கும், ஷீயின் தலைமைக்கும், உலக அளவில் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

இத்தகைய சூழ்நிலையில், அவர் பொதுமக்களின் தேசிய உணர்வுக்கு எதிரான முடிவை ஏன் எடுக்க வேண்டும்? இரு தலைவர்களும், கடைசியாக, மார்ச், 26ல், சவுதி அரேபியா தலைமையில் நடந்த, ‘ஜி – 20’ என்ற, 20 நாடுகளின் கூட்டமைப்பின் சந்திப்பில் பங்கேற்றனர். இரு தலைவர்களும், இதே கூட்டமைப்பின், வருடாந்திர மாநாடு நவம்பர், 21 – 22ல் நடக்கும் போது, மீண்டும் சந்திப்பர். ஆனால், அதற்கு நான்கு நாட்களுக்கு முன்பே, அவர்கள் உயர் மட்ட சந்திப்பு நடந்து முடிந்திருக்கும். இந்திய – சீன உறவில் ஏற்பட்டுள்ள மாபெரும் திருப்பத்தை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், பார்லிமென்டில், செப்டம்பர், 15ல் நிகழ்த்திய தன் உரையில், தெளிவாக எடுத்துக் கூறினார். அதாவது, ‘லடாக் எல்லையில் எடுத்துள்ள ஆக்கிரமிப்பு முயற்சிகளை, சீனா கைவிடும் வரை, இந்தியா அவற்றை நீக்க எடுத்துள்ள ராணுவ முயற்சிகளில் மாற்றம் இருக்காது’ என்றார்.

நேரடி பேச்சு நடத்தினர்

அவர் சமீபத்தில் மாஸ்கோவில், எஸ்.சி.ஓ., என்று அழைக்கப்படும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின், ராணுவ அமைச்சர்கள் சந்திப்பின் போதும், இதே நிலைப்பாட்டை, சீன பாதுகாப்பு அமைச்சரிடம் எடுத்துச் சொன்னார். அதன்பின், எஸ்.சி.ஓ., தொடர்பான வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பின் போது, இந்தியாவின் ஜெய்சங்கர், சீனாவின் வாங்-யீ இருவரும் செப்டம்பர், 10ல் நேரடி பேச்சு நடத்தினர். அதைத் தொடர்ந்து வெளியிட்டிருந்த அறிக்கையில், இரு நாடுகளும் நேருக்கு நேராக நிற்கும் படைகளை விலக்கி, பதற்ற நிலையை குறைக்க வேண்டும் என்பதை, ஒப்புக் கொண்டதாக தெரிவித்திருந்தனர். ஆனால், அதற்கான கால அட்டவணையோ அல்லது அடுத்த கட்ட நடவடிக்கையையோ, அவர்கள் குறிப்பிடவில்லை.

இந்திய – சீன உறவின் அணுகுமுறையில், இந்தியா முன்னெப்போதும் இல்லாத மனோதிடத்தோடு செயல்படுவதை, இந்த நிலைப்பாடு காட்டுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம், லடாக் பகுதியில், நம் ராணுவம் ஆகஸ்ட் மாத கடைசி வாரத்தில், பங்காங்ட்சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கே உள்ள மலைப் பகுதிகளில் உள்ள சிகரங்களை கைப்பற்றி, கைலாஷ் மலைத்தொடரை தம் ஆளுமையில் கொண்டு வந்துள்ளதேயாகும். இன்னமும் டெப்சாங் பள்ளத்தாக்கில், சீனப்படை நடமாட்டம் இருந்தாலும், அவர்கள் மீது தேவையான போது, எதிர்மறைத் தாக்குதல் நடத்தும் திறன், நம் கையில் மட்டுமே உள்ளது.

அதனால் தான், மோடி – ஷீ பேச்சுவார்த்தை நவம்பர் மாதத்தில் நடக்கப் போகும் செய்தி வெளியாவதற்கு முன்பே, சீன வெளியுறவு துறை, சீன மொழியில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ‘முதலாவதாக, சீன – இந்திய ஆதிக்க எல்லைக் கோடு, நவம்பர், 7, 1959ல் இருந்தது என்பதில், நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இதை, 1950ல், சீனா உலக நாடுகளுக்கு அறிவித்தது, அது, இந்தியாவுக்கும் தெரியும்’ என்று கூறியுள்ளது. மேலும், இந்தியா இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து, இந்த எல்லைக்கோட்டை தாண்டி, சீனாவுக்கு சொந்தமான பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதாகவும், படைகளை குவித்துள்ளதாகவும் கூறியுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை விலக்கி, படைகளை பின்வாங்கினால் மட்டுமே, சுமுக நிலை ஏற்படலாம் என்றும் கூறியுள்ளது.

இந்த, 1959 நவம்பர் எல்லை நிலைப்பாட்டை, இந்தியா அப்போது, பிரதமராயிருந்த நேருவின் காலத்திலிருந்து, தொடர்ந்து இதுவரை ஒப்புக் கொள்ளவில்லை. அப்படி இருந்தும், 61 ஆண்டுகளுக்கு பின், ஏன் நவம்பர், 1959 எல்லை கோட்டை சீனா உயிர்ப்பித்துள்ளது என்பதே கேள்வி. இந்த வரைபடத்தை, சீன பிரதமராக இருந்த சூ என்-லே, பிரதமர் நேருவுக்கு எழுதிய கடிதத்தில் இணைத்து, ‘அமைதி நிலவ இரு நாடுகளும், இந்த எல்லை கோட்டிலிருந்து, 20 கி.மீ., பின் வாங்கி நிறுத்தப்படலாம்’ என்று யோசனை கூறினார். அந்தக் கருத்தை முழுமையாக நிராகரித்தார், பிரதமர் நேரு. ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள கருத்தின்படி, இந்த எல்லை கோட்டில் அடங்கியுள்ள, 12 வேறுபாடுள்ள இடங்களில், சமர் லுங்பா, டெம்சோக், சூமார் உள்ளிட்ட ஆறு இடங்களை, சீனா ஆக்கிரமிக்க முயற்சிக்கலாம் என்று, ராணுவம் தயாராக இருப்பதாக எச்சரித்துள்ளது. இந்தப் பிரச்னை லடாக் எல்லையில் தீர வேண்டுமானால், இரு தரப்பு நிபுணர்கள் லடாக் எல்லை பேச்சில் ஒப்புக் கொண்டபடி, சீனா சீரான வரைபடங்களை அளிக்க வேண்டும். அதன்படி இரு தரப்பும், முடிவெடுக்க அது உதவும்.

ஆனால், சீனாவின் மீது மோடி அரசு வைத்திருந்த நம்பிக்கையை, தற்போது இழந்து விட்டது. இதற்கு, ஜூலை மாதம் லடாக்கில் கல்வான் பகுதியில், எதிர்பாராத விதமாக சீனப்படைகளுடன் நடந்த கைக்கலப்பில், கர்னல் பாபு உட்பட, 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம், ஒரு பெரியகாரணம் என்று கூறலாம். ஏனெனில், 1962-ல் நடந்த இந்திய – சீன போருக்குப் பின், இந்திய – சீன உறவில், சீனாவின் கை தான் ஓங்கி இருந்தது. அதனால், அவ்வப்போது சீனா காட்டிய உதாசீனங்களையும், அத்துமீறல்களையும் இந்தியா பொறுமையுடன் சுமூகமான உறவுக்காக, ஜீரணித்து வந்தது.

வெளியுறவை நிர்ணயிப்பதில்லை

ஆனால், படைகளைப் பின்னெடுக்க பேச்சில் ஒப்புக்கொண்ட பின்பும், கல்வான் பகுதியில் உயிர் சேதம் ஏற்படுத்திய, சீனாவின் செயல், இந்தியாவின் தன்மான உணர்ச்சியை தட்டி எழுப்பியுள்ளது. ஆகவே, இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவை மீட்டெடுக்க, சீனா என்ன முயற்சிகளை எதிர்கொள்கிறது என்பதே, பேச்சுகளின் வெற்றி – தோல்வியை நிர்ணயிக்கும். ஏனெனில், ஜனநாயக நாடான இந்தியாவில், தலைவர்கள் முடிவுகள் மட்டுமே, வெளியுறவை நிர்ணயிப்பதில்லை. எனவே, மோடி – ஷீயின் நவம்பர் பேச்சு சுமுகமாக நடந்தால் மட்டும் போதாது; ஆக்கப்பூர்வமான முடிவுகளை சீனா எடுக்க தயாரா, இல்லையா என்பதையும் காட்டும் என, நம்புகிறேன்.

(கர்னல் ஆர்.ஹரிஹரன், ராணுவ நுண்ணறிவுத் துறையில், 30 ஆண்டு அனுபவம் பெற்றவர். தெற்காசிய நாடுகள் மற்றும் சீனாவின் நிகழ்வுகளை ஆய்பவர். Views expressed are personal)

3 views0 comments

Comments


LATEST
bottom of page