top of page
Writer's pictureupSpark Technologies

இந்திய-சீன உறவு, மற்ற இடர்கள் : நால்வர் அணி (The Quad) – பகுதி இரண்டு ; சுப்ரமண்யம் ஸ்ரீதரன்

Image Courtesy: Thehillstimes.in

Article 67/2020

மாவோவின் கருத்துப்படி திபெத் உள்ளங்கை மற்றும் அருணாச்சலப்பிரதேசம், பூட்டான், நேபால், சிக்கிம், லடாக் அதன் ஐந்து விரல்கள். அனைத்தும் செஞ்சீனாவிற்குச் சொந்தம்! இது, அதன் நில ஆக்கிரமிப்புக்கு மூல காரணம், ஏனெனில் இந்த ஐந்து விரல்களும் திபெத்தின்  பாதுகாப்புக்குத் தேவை. சின்ஜியாங், திபெத் பிரதேசங்களில் நிலவும் பிரிவினை வாதத்தை அடக்கவும், எளிதாகத் திபெத் தலைநகர் லாஸாவுக்கும், சின்ஜியாங் பிரதேசத்துக்கும்  இணைப்பு ஏற்படுத்தவும் லடாக் வழியாக அமைத்த சாலை அதற்கு மிக முக்கியமானது. அது மற்றொரு காரணம். அந்தச் சாலைப் பாதுகாப்புக்கு இடைத்தாங்கு (buffer) பகுதிகளுக்காக லடாக் முழுவதையும் ஆக்கிரமிக்க விரும்புவது அடுத்த காரணம். திபெத் மதகுருவும் திபெத்தியர்கள் அரசியல் தலைவருமான தலாய்  லாமாவுக்கு இந்தியா தஞ்சமளித்திருப்பதும் பிறிதொரு காரணம்.

வெறும் நிலப்பரப்பு தாவா சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல இந்திய-சீன உறவின் விரிசல்கள். பலவிதப் பரிமாணங்கள் உள்ளன அவ்விரிசலுக்கு. நால்வர் அணியின், மற்ற நாடுகளுடன் செஞ்சீனாவிற்கு உள்ள பிணக்குகளைப்  பற்றிப் பார்ப்பதற்கு முன்னால், இந்தப் பற்பலப் பரிமாணங்கள் என்னவென்று பார்க்கலாம். என்றாலும், இவையெல்லாம் மேலெழுந்தவாரி தானே தவிர நாம் முன்பு பார்த்தது போல ‘இடை ராஜ்ஜியம்’, ‘சுவர்கத்தால் இவ்வுலகை ஆள முடிசூடப்பட்ட பேரரசர்’ போன்ற அடிப்படைத் தத்துவங்களின் வெளிப்பாடே இவை.

எனவே, நிலத் தாவா மட்டுமின்றி எல்லா விதங்களிலும் சீனா நமக்குத் தொல்லை அளித்து வருகின்றது. அவற்றில் சில முக்கியமானவற்றைப் பார்ப்போம்.

மற்ற பிணக்குகள்

திபெத் பகுதி செஞ்சீனாவின் மிகப் பெரிய ஆக்கிரமிப்புப் பகுதி. சீனாவின் நிலப்பரப்பில் எட்டில் ஒரு பங்கு திபெத் மட்டுமே. சின்ஜியாங் போல, திபெத்தும் 70 ஆண்டுகளுக்கு முன்னால் செஞ்சீனாவால் ராணுவ ரீதியாகக் கையகப்படுத்தப் பட்ட ஒரு தனி நாடுதான். நாம் முன்னர் பார்த்தபடி அதன் இயற்கை வளங்கள் சீனாவிற்குத் தேவை. சீனாவின் நீர்த் தேவையில் நான்கில் ஒரு பங்கைப் பூர்த்தி செய்யும் அளவிற்குத் திபெத்தில் நீர் உள்ளது. மேலும், திபெத்தின் மூலம் பல பெரிய நதிகளின் மேல் ஆற்றுப் பகுதிக்குச் (upper riparian) சொந்தம் கொண்டாடுகிறது சீனா. அதனால், அவற்றின் கீழாற்றங்கரைப் பகுதிகளிலுள்ள (lower riparian) நாடுகளைத் தன் கட்டுப்பாட்டில் வைக்க முடியும் என்பதும் திபெத்தைச் சீனா கைப்பற்ற ஒரு காரணம். 1960ல் சிந்து மற்றும் பஞ்சாபின் மேலாற்றுப் பகுதிகளுக்குச் சொந்தக்காரர்களாகிய நாம் பாகிஸ்தானுடன் ‘சிந்து நதி நீர் ஒப்பந்தம்’  (Indus Water Treaty) செய்துகொண்டு 80 சதவிகிதம் சிந்து ஆற்று நீரை தாராளமாகப்  பாகிஸ்தானிற்கு வழங்கினோம். மேலும் பஞ்சாபின் மற்ற ஐந்து ஆறுகளில் இரண்டு ஆறுகளின் தண்ணீரையும் (ஜீலம், செனாப்) முழுமையாகப் பாகிஸ்தானிற்கு வழங்கினோம். சண்டை சச்சரவுகள் நடக்கும் போதும் நாம் இந்த ஒப்பந்தத்தை முழுமையாகக் கடைப்பிடிக்கிறோம். இது நமது வெகுளித்தனமான அயலுறவுக்கொள்கையின் ஒரு முகம் என்றால், சீனாவின் ஆற்றுநீர் பங்கீட்டு ஒத்துழையாமைப் போக்கு அதன் யதார்த்தவாதத்தின் மற்றுமொரு முகம். ஆற்று நீர் விநியோக ஒப்பந்தங்களை, இந்தியா, மியான்மர், தாய்லாந்து, வியட்நாம் லாவோஸ், கம்போடியா உட்பட, எந்த நாட்டுடனும் செய்துகொள்ள செஞ்சீனா மறுக்கிறது,. பலப்பல அணைகளை இந்த ஆறுகளின் குறுக்கே கட்டி நீர்ப்போக்குவரத்தைத் தடை செய்து கீழை நாடுகளின் பஞ்சத்திற்கும், வெள்ளத்திற்கும் காரணமாக இருக்கிறது.

பிரம்மபுத்திரா ஆற்றை வடக்கிலுள்ள அதன் வறண்ட பகுதிகளுக்கு திசை திருப்பும் ஒரு முயற்சியும் சீனாவிடம் நெடுங்காலமாக  இருக்கிறது. சீனாவின் மக்கட்தொகையில் 50% வடக்கில் இருந்தாலும், 20% நீர் வளம்தான் அங்குள்ளது. எனவே 4500 கோடி கன அடித் தண்ணீரை பிரம்மபுத்ரா நதியிலிருந்து திசை திருப்ப அது தீர்மானித்துள்ளது. இதற்கு நாம் கவலை தெரிவித்தால், “சீனா மிகவும் பொறுப்புள்ள நாடு” என்று ஒற்றை வரியில் முடித்துக்கொள்ளுகிறது. மிகுந்த சிரமத்திற்குப் பின் பிரம்மபுத்ரா நதியின் (திபெத்தில், யார்லுங் சாங்போ, Yarlung Tsangpo) வெள்ள நீர் அளவுகளை  நமக்கு முன்கூட்டியே தெரிவிக்க செஞ்சீனா 2006ல் தான் இயைந்தது, ஆனால், 2017 டோக்லாம் (Doklam) மோதலின்போது அவ்வாறு கொடுக்க மறுத்தது, அதனால் அஸ்ஸாமில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 130 உயிரிழப்புகள்  நடந்தன, 30 லட்சம் மக்கள் மாட்டிக் கொண்டனர். அதே சமயம், சிக்கிம் வழியாகக்  கைலாச மலைக்குச் செல்லும் யாத்திரையையும் திடீரென சாலைகள் பழுதடைந்துவிட்டதாகப் போலிக் காரணம் சொல்லித் தடை செய்தது. தன்னுடன் உடன்படாத ஒரு தேசத்திற்கு உடனுக்குடன் தகுந்த தண்டனை வழங்குவது என்பது செஞ்சீனாவின் அயல்நாட்டுக் கொள்கை. இது 3000 ஆண்டு ஏகாதிபத்திய மன்னராட்சியின் மனப்பாங்கு. ‘யோங்க்லே’  (Yongle) என்றழைக்கப்படும் 15ம் நூற்றாண்டு மிங் வம்சப் (Ming Dynasty) பேரரசர் ‘ஜு டி’ (Zhu Di) தன் கடற்படைத் தளபதி செங் ஹாவைப் (Admiral Zheng He) பல இடங்களுக்கு அனுப்பித் தன் கட்டளைக்குக் கட்டுப்படாத மற்ற நாட்டு அரசர்களைத் தன் அரசவைக்கு இழுத்து வரச் சொன்னார். இந்த ‘உடனடி  தண்டனை’ அனுபவித்தவர்களில் ஒருவர் இலங்கை அரசர். இது போன்ற போக்கை இன்று கூட நாம் ஜப்பான், கொரியா, ஆஸ்திரேலியா, கனடா , நார்வே, இங்கிலாந்து, பிலிப்பைன்ஸ், மங்கோலியா போன்ற நாடுகளுடன் செஞ்சீனாவிற்குப் பிணக்கு ஏற்படும் தருணங்களில் எல்லாம் பார்க்கிறோம். சீனாவால் மிகச் சக்திவாய்ந்த அமெரிக்காவுடன் மட்டும் இதைச் செய்ய முடிவதில்லை, தற்போதைக்கு.

1967ல் நாதுலா கணவாய்ப் (Nathu La) பகுதியிலும், பின்னர் 1986-87ம் ஆண்டுகளில் சும்டூரோங் சு (Sumdorong Chu) பகுதியிலும் ஆக்கிரமிக்க முற்பட்ட சீனப் படைகளை நம் ராணுவத்தினர் விரட்டியடித்தனர். இவை நமது ராணுவம் மற்றும் மக்களின் 1962ல் இழந்த தன்னம்பிக்கையை மீட்டெடுத்தது. இதற்கிடையில் சிக்கிம் நம்முடன் இணைந்தது. அதே சமயம், அதுவரை வட கிழக்கு எல்லைப் பிராந்தியப் பகுதி (NEFA) என்றழைக்கப்பட்டு வந்த அருணாச்சலப் பிரதேசம், சீன எதிர்ப்பை மீறி, 1987ல் முறையாக நம் நாட்டுடன் இணைக்கப்பட்டது.  நமது இத்தகைய திடமான முடிவுகளுக்குப் பின்னரே, இந்திய-சீன உறவுகள் சற்றே மேம்படத் துவங்கின.  இது நமக்குணர்த்துவது என்னவென்றால், சீனா வலுவான எதிரியைத்தான் மதிக்கிறது என்பதே. ஆனால், சீனா நமக்கெதிரான போக்கைக் கைவிட ஒருபோதும் தயாராக இல்லை. சீனப் பழமொழியின்படி ‘ஒரு மலையில் இரண்டு புலிகள் வசிக்க முடியாது’.

செஞ்சீனாவின் அணுஆயுத ராஜ தந்திரம்

இதற்கிடையில், ‘எதிரியின் எதிரி எமக்கு நண்பன்’  என்கின்ற தத்துவப்படி பாகிஸ்தானும், சீனாவும் நட்புப்பாராட்டத் துவங்கின. ஆசியாக் கண்டத்தில் செஞ்சீனா மற்றும் சோவியத் யூனியன் மூலமாக கம்யூனிசம் பரவுவதைத் தடுக்கும் நோக்கத்தில்  நிறுவப்பட்ட  சீட்டோ (SEATO) அமைப்பின் உறுப்பு நாடாகி, அதற்காக மிகப்பெரிய அளவில் அமெரிக்காவிடமிருந்து ராணுவத் தளவாடங்களையும் பெற்ற பாகிஸ்தான், அதே சமயத்தில் சீனாவுடனும் நெருங்கிய நட்புப் பாராட்டி வந்தது ! ‘தொட்டிலையும் ஆட்டி, குழந்தையையும் கிள்ளும்’ தந்திரம். ஆனால், இன்றோ, நாம் அமெரிக்காவுடன் நட்புப் பாராட்டினால் மற்ற நாடுகளுடனான நட்பை இழந்து விடுவோம், நமது அயலுறவுக் கொள்கைக்குப் பங்கம் வந்துவிடும் என்று அஞ்சுகிறோம் ! பாகிஸ்தானையெல்லாம் நாம் உரைகல்லாக எடுத்துக்கொள்ள முடியாது என்றாலும், அது யதார்த்தவாத வெளியுறவுக் கொள்கையை மிகச் சுலபமாக, தனக்குச் சாதகமாகப் பன்னெடுங்காலம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

1965, 1971ல் பாகிஸ்தான் நம் மீது போர் தொடுத்தபோது, அதற்கு உதவும் நோக்கத்துடன் சீனா நம் எல்லைப்பகுதியில் நமக்கு எச்சரிக்கைகளும், தொல்லையும் கொடுத்தது. 1971ல் அமெரிக்க-சீன உறவு அமைய இடைத்தூதராக பாகிஸ்தான் செயலாற்றியதால் சீன-பாகிஸ்தான் நட்பு மேலும் பலப்பட்டது. 1964ல் சீனா அணு ஆயுதப் பரிசோதனையை வெற்றிகரமாகச் செய்தது. 1964ல் செஞ்சீனா அணு ஆயுதப் பரீட்சை செய்தபோதே நாமும் செய்திருக்க முடியும், தொழிநுட்ப முறையில் நாம் சீனாவை விட அந்தக் கால கட்டத்தில் முன்னணியில் இருந்தோம், ஆனால் நம் மீது தடைகள் விதிக்கப்படும் என்கின்ற பயத்தில் அதைத் தள்ளிப்போட்டுக்கொண்டு வந்தோம். 1974ல் நாம் ‘அமைதியான அணு வெடிப்பைச்’ சோதனை முறையில் செய்து வெற்றி கண்டோம். நாம் எதிர்பார்த்தபடியே, 1974ல் மேற்கத்திய நாடுகள், குறிப்பாக அமெரிக்கா நம் மீது தொழில் நுட்பத் தடைகளை விதித்தன. நம் மீது அணுத் தடைகளைப் பலப்படுத்தவே ‘லண்டன் குழு’ (London Group) என்று ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது. அதுவே பிற்காலத்தில் ‘அணுத் தொழில்நுட்பம் வழங்குவோர்’ (Nuclear Suppliers Group) என்கின்ற அமைப்பாக இன்று திகழ்கின்றது. நம்மை மையப்படுத்தியே இது 1974ல் தொடங்கப்பட்டது. காலம் மாறியது. இன்று உலக நாடுகள் அனைத்தும் நம்மை ஒரு அணு ஆயுத நாடாக ஏற்றுக் கொண்ட பின்னரும், இந்த அமைப்பில் நாம் இணைய செஞ்சீனா ஒன்று மட்டுமே தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இதைப்பற்றிப்  பின்னர் பார்ப்போம்.

முன்னாள் பாகிஸ்தான் அதிபர் ஸுல்ஃபிக்கார் அலி புட்டோ தூக்கிலிடப்படுவதற்கு முன் எழுதிய ‘நான் கொலை செய்யப்பட்டால்’ என்ற புத்தகத்தில் 1965யிலேயே தேவைப்பட்டால் செஞ்சீனா, பாகிஸ்தானுக்கு அணு ஆயுதங்களை வழங்க ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்திருக்கிறார். பலகாலம் பாகிஸ்தானின் வெளியுறவுக் காரியதரிசியாக இருந்த ஆகா ஷாஹியும் அதை உறுதி செய்திருக்கிறார். அப்படி என்ன தேவை பாகிஸ்தானிற்கு? இந்தியாவைத் தாக்குவதுதான் ! அதற்கு உதவச் செஞ்சீனாவும் அப்பொழுதே ஒப்புக்கொண்டுள்ளது. ஸுல்ஃபிக்கார் அலி புட்டோதான் பாகிஸ்தானின் அணு ஆயுதங்களுக்கு வித்திட்டவர், ‘வழியில்லையெனில் புல்லையாவது உண்போம், ஆனால் அணு ஆயுதங்களை அடைந்தே தீருவோம்’ என்று முழக்கமிட்டவர். எனவே பாகிஸ்தானுக்குச் சீனாவின் அணு ஆயுத ஆதரவு அப்போதே கிடைத்துவிட்டது. பாகிஸ்தான் அணு ஆயுதங்களை நம் மீது மட்டுமே ஏவும் என்று தெரிந்திருந்தும், சில அணுகுண்டுகளை, அவற்றின் வடிவமைப்புச் செயல்திட்டங்களை (blueprints) பாகிஸ்தானிற்குக்  கொடுத்து, அதற்குக் கைமாற்றாக விஞ்ஞானி A.Q. கான் மூலம் ஹாலந்து தேசத்திலிருந்து பாகிஸ்தானுக்குக் கடத்திக் கொண்டுவரப்பட்ட யுரேனியத்தைப் பிரித்தெடுக்கும் முறையைப் பெற்று, 1980கள் வாக்கில் பாகிஸ்தானை அணுஆயுத நாடாக்கியது சீனா. 1979யிலேயே சீனாவின் சின்ஜியாங் பகுதியிலுள்ள கஷ்கரில் (Kashgar) இருந்து எல்லைப்புறத்திலுள்ள காரகோரம் (Karakoram) மலைத் தொடரிலுள்ள  குஞ்சேரப் (Khunjerab) கணவாய் மூலம், பாகிஸ்தான் வசமுள்ள கில்கிட் (Gilgit) பிரதேசம் வழியாகக் காரகோரம் நெடுஞ்சாலை என்றைழைக்கப்படும் பாதை  பாகிஸ்தானிற்கு அமைக்கப்பட்டது. மிக முக்கிய அணு ஆயுதம் போன்றவற்றை அதன் மூலம் இரகசியமாகப் பாகிஸ்தானுடன் பரிமாற்றம் செய்து கொண்டது.

இந்தக் காரகோரம் நெடுஞ்சாலைதான் இன்றைய சீனா-பாகிஸ்தான் நட்புக்கு முதுகெலும்பாக உள்ளது. இதன் மூலமாகத்தான் சீனா பாகிஸ்தானின் மக்ரான் (Makran) கடலோரப்பகுதியில் உள்ள முக்கியத் துறைமுகமான குவாடார் (Gwadar) பகுதிக்குச் சாலை, ரயில் வசதிகளை அமைத்துக் கொண்டிருக்கிறது. எண்ணெய் மற்றும் வாயுக் குழாய்களை குவாடாரிலிருந்து கஷ்கர் வரை அமைக்கவும் போகிறது. இது ஓரளவுக்கு செஞ்சீனாவின் ‘மலாக்கா இக்கட்டில்’, அதாவது தென் சீனக் கடைலையும் வங்காள விரிகுடாவையும் இணைக்கும் குறுகலான, சீனாவின் பாதுகாப்புக்கு குந்தகமான மலாக்கா நீர்வழிப்பாதையில் (Malacca Straits), இருந்து தப்பிக்கவும், கஷ்கர் பகுதிகளில் வளர்ச்சியை அதிகரித்து அதன் மூலம் அங்கு நிலவும் பிரிவினைவாத பிரச்சினைகளைச் சமாளிக்கவும் உதவும் என்றும் சீனா கணக்குப் போடுகிறது. ஆயினும், இது குவாடார் துறைமுகத்தைத் தனது கப்பல் படைக்காக  அபகரிக்கும் முயற்சியே. இந்த கில்கிட் பகுதி பாகிஸ்தானிடம் இல்லையெனில் பாகிஸ்தான்-சீனா எல்லையே கிடையாது, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (China Pakistan Economic Corridor, CPEC) கிடையாது, நமக்கும் தொந்திரவு கிடையாது. ஏவுகணைகளையும், அவற்றின் வடிவமைப்புக்களையும் தானாகவும், தனது அடியொற்றியான வட கொரியா மூலமும் பாகிஸ்தானுக்குச் சீனா அளித்தது. ஏற்கெனவே வட கொரியாவிற்கு ஏவுகணைத் தொழில் நுட்பங்களைச் சீனா அளித்திருந்தபடியால், தனக்குச் சம்பந்தமில்லாததுபோல் காட்டிக் கொள்ளவும் அமெரிக்கா மற்றும் MTCR என்றழைக்கப்படும் ஏவுகணைப் பரவலைத் தடுக்கும் அமைப்பின் தடைகள் தம் மீது விழாமல் இருக்கவும்  வட கொரியா மூலம் அவற்றைப் பாகிஸ்தானுக்குப் பரிமாற்றம் செய்தது. இவற்றைப் பாகிஸ்தானின் அதிபர் பெனாசீர் புட்டோவே ஒப்புக்கொண்டுள்ளார். பாகிஸ்தான் தனது அணு ஆயுதத்தைப் பரீட்சை செய்ய தனது சின்ஜியாங் பகுதியில் உள்ள லோப் னோர் (Lop Nor) அணு ஆயுதப் பரிசோதனை  மையத்தில் ஒப்புதல் தந்தது. இவற்றை விட நம் மீது வன்மம் கொண்ட செயல்கள்  இருக்கவே முடியாது. மற்ற ராணுவத்தளவாடங்கள் போலல்ல அணு ஆயுதங்களும் அவற்றைத்  தாங்கிச் செல்லும் ஏவுகணைகளும். எனவே, சீனாவை நமது எதிரியாக மட்டுமே நாம் கருத முடியும்.

இவை ஒருபுறமிருக்க, 1998ல் நாம் சக்தி-2 என்னும் அணுஆயுதத் தொடர் பரிசோதனைகளை, அணுப்பிளப்பு (fission) அணுப்பிணைப்பு  (fusion) மூலம், வெற்றிகரமாகச் செய்து நமது அணுஆயுதங்களின் வடிவமைப்புக்களை உறுதி செய்தோம். இதை அமெரிக்கா பலமாக எதிர்த்தது. அப்போது, அவை நமக்கு ஏன் தேவை என்று விளக்கும் ரகசியக் கடிதத்தை அமெரிக்காவிடம் பிரதமர் வாஜ்பாய் அளித்தார். அதில், சீனாவின் அணு ஆயுத அச்சுறுத்தல் முக்கியக் காரணம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதை அமெரிக்கா சீனாவிற்கு அனுப்பியதால் சீனாவிற்கு நம் மீது மிகுந்த ஆத்திரம் ஏற்பட்டது. இருப்பினும், 2008ல் இந்தியா-அமெரிக்கா இடையே ‘123’ எனப்படும் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகியது. நம்மை மெய்வழிநடப்பில் (de-facto) ஒரு அணு ஆயுத நாடாக அமெரிக்கா ஒப்புக்கொண்டது. நமது நாட்டில் இயங்கும் அணு உலைகளை ‘அணு ஆயுதம் சார்ந்த ‘ மற்றும் ‘அணு ஆயுதம் சாராத’ என்று இரு வகைகளாகப் பிரிக்க ஒப்புக்கொண்டது. இரண்டாவது பிரிவில் உள்ள அணு உலைகள், சர்வதேச அணுசக்தி முகைமையின் (IAEA) முழுநோக்குப் பாதுகாப்புக்குள் (fullscope safeguard) செயல்படும் எனவும், முதலாவது பிரிவில் உள்ள அணு உலைகள் இந்திய அரசின் முழுமையான அதிகாரத்தின் கீழ் மட்டுமே செயல்படும்  எனவும் பிரிக்கப்பட்டன. இது ஐந்து அணு ஆயுத நாடுகளிலுள்ள (P-5) ஏற்பாட்டுக்குச் சமம். இந்த ஏற்பாட்டிற்கு சர்வதேச அணுசக்தி முகைமை ஒப்புதல் அளிக்க செஞ்சீனா எதிர்ப்புத் தெரிவித்தது. அமெரிக்க அதிபர் புஷ் ஜூனியரின் தொலைபேசி அழைப்புக்குப் பின் சீனா ஒத்துக்கொண்டது. அந்தக் காலகட்டங்களில், ராஜீய விவகாரங்களில் அதற்கு இன்றைக்கிருக்கும் செல்வாக்கு இல்லை. இதனால், இந்தியாவிற்கு அணுஉலைகளுக்குத் தேவையான யுரேனியம் மற்றும் பல தொழில் நுட்ப உதவிகளைப் பெறுவதற்காக 1974 முதல் இருந்த தடை நீங்கியது. இவற்றைச் சீனா விரும்பவில்லை, ஏனெனில் சீனாவிற்குச் சமமாக வேறொரு சக்தி, அதுவும் ஆசியாவிலேயே மேலும் அதன் எல்லை அண்டை நாட்டிலேயே உருவாவதை அது ஏற்றுக்கொள்ளவில்லை.

நம்மைத் தெற்காசியா என்ற குறுகிய, முன்னேற்றமடையாத ஒரு வட்டத்திற்குள் அடைத்து வைப்பதையே சீனா குறிக்கோளாகக் கொண்டிருந்தது. எப்படி வஞ்சகமாக வட கொரியாவைத் தனது கருவியாகத் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்கா போன்றவற்றிற்கெதிராகப் பயன்படுத்துகிறதோ, அதைப் போலவே பாகிஸ்தானை நமக்கெதிராக உபயோகப்படுத்தித்  தடுக்கிறது. எனவே, நமது 2008 அணு ஒப்பந்தத்திற்குப் பிறகு, தானும் ஏற்கெனவே பாகிஸ்தானிற்கு 4 அணு உலைகளைத் தரப் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே ஒப்பந்தம் செய்துகொண்டிருப்பதாகப் பொய் கூறி அந்த உலைகள் கட்டுமானத்தில் சீனா இறங்கி இருக்கிறது. 2004ல் தான் சீனா அணுத்தொழில் நுட்பம் வழங்குவோர் குழுமத்தில் (Nuclear Suppliers Group) இணைந்தது. அதன் சட்டவிதிகளின்படிப் புதிதாக அணு உலைகளைப் பாகிஸ்தானில் அமைப்பது இயலாது என்பதால் இந்த ‘தாத்தா கால’ (grandfathering) யுக்தியைக் கையாளுகிறது.

பாகிஸ்தானின் மூலம் பல தொல்லைகளை நமக்குச் சீனா அளிப்பதில் அணு ஆயுதங்கள், ஏவுகணைகளுக்கடுத்து வருவது தீவிரவாதத்திற்குச் சீனாவின் ஆதரவு. இது இரண்டு வகைப்படும், ஒன்று அதன் நேரடிப் பங்களிப்பு, இரண்டு பாகிஸ்தானின் எல்லைதாண்டிய இந்திய பயங்கரவாதத்திற்கு அதன் ஆதரவு.   1960களில் இருந்து நமது வடகிழக்கு எல்லைப் பகுதிகளில் ‘ஏழு சகோதரிகள்’ என்றழைக்கப்படும் அசாம், திரிபுரா , மேகாலயா, மிசோரம், அருணாச்சலப் பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர் பகுதிகளில் பிரிவினைவாதத்தை ஊக்குவித்து வந்துள்ளது சீனா. அப்போதிருந்த கிழக்குப் பாகிஸ்தான் அதற்கு அனுகூலமாக இருந்தது. நம் நாட்டின் மிக முக்கியப் பிரிவினைவாதியான அசாம் விடுதலை இயக்கத்தின் (ULFA) தலைவரான பரேஷ் பரூவா சீனாவின் யுன்னான் (Yunnan) மாகாணத்தின் முக்கிய நகரமான ரூலியில் (Ruili) இன்றும் வசிக்கிறார். 2004ல், பங்களாதேஷ் துறைமுகமான சிட்டகாங் மூலம் ஒரு கப்பல் நிறையத் தளவாடங்களை வடகிழக்குத் தீவிரவாதிகளுக்குச் செஞ்சீனா அனுப்பியது. அனைத்தையும் பங்களாதேஷ் அரசே பறிமுதல் செய்தது.

நமக்கெதிரான பாகிஸ்தானின் தீவிரவாதத்திற்கு மிகப் பெரிய அளவில் ஐ நா சபையில் சீனா ஒத்துழைப்பு அளித்தும் வருகிறது. லஷ்கர்-ஏ-தொய்பா (Lashkar-e-Toiba) அமைப்பின் நிறுவனரும்,நம் மீது பல பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியவருமான ஹஃபீஸ் சயீதை ஐ. நா.பாதுகாப்பு சபையின் 1267 தீர்மானத்தின் கீழ் பன்னாட்டு பயங்கரவாதியாக அறிவிப்பதற்குத் தன் ‘தடை செய்யும் அதிகாரத்தைப்’ (veto) பயன்படுத்திப் பல ஆண்டுகள் தப்புவித்தது. அதை விட, ஜெய்ஷ் -ஏ-முஹம்மது (Jaish-e-Muhammad) அமைப்பின் நிறுவனரான மசூத் அசாரைப் (Masood Azhar) பல ஆண்டுகள், ஒவ்வொரு முறையும் தன் தடையை உபயோகித்துத் தப்ப வைத்தது. ‘தகுந்த ஆதாரங்கள்’ இல்லை என்பதே அதன் வாதம் !  சீனாவின் இந்த அணுகுமுறையினால்தான் 2008 மும்பை நகர்ப்புற கொரில்லா யுத்தத்திற்குப் (Mumbai urban guerrilla warfare) பின்பு, ஜெய்ஷ் -ஏ-முஹம்மது அமைப்பினால் 2016 ஊரி (Uri) தாக்குதலையும், 2019 புல்வாமா (Pulwama) தாக்குதலையும் நடத்த முடிந்தது. தான் அடக்குமுறை ஆட்சி நடத்தும் சின்ஜியாங் வீகர் (Uyghur) இனப் பகுதிக்குள், இவர்கள் மூலம், இஸ்லாமியத் தீவிரவாதம் தலை தூக்கக் கூடாதென்பதும், இந்தியா இன்னல்களை அனுபவிக்கட்டுமே என்பதுமே காரணங்கள்.

செஞ்சீனாவின் ஏனைய முட்டுக்கட்டைகள்

சீனா நான்கு முக்கிய உலகளாவிய ஒப்பந்தங்களான அணுத்தொழில் நுட்பம் வழங்குவோர் குழுமம் (Nuclear Suppliers Group)  ஏவுகணைத் தொழில்நுட்பம் தடுப்பு விதிமுறை (MTCR) இரட்டைப் பயன்பாட்டைத் (dual-use) தடை செய்யும் வாசனார் அமைப்பு   (Wassenaar Arrangement) மற்றும் இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களைத் தடை செய்யும் ஆஸ்திரேலியாக் குழுமம் (Australia Group) ஆகியவற்றில் நம்மைச் சேர விடாமல் தடுக்க முயன்றது. நாம் மற்ற மூன்றில் சேர்ந்தாலும், அணுத்தொழில் நுட்பம் வழங்குவோர் குழுமத்தில் சேர இன்றுவரை சீனா பெரும் தடையாக உள்ளது. மற்ற நாடுகள் ஒத்துக் கொண்டாலும், சீனா மட்டுமே முட்டுக்கட்டை போடுகிறது. தென்கிழக்காசிய நாடுகள் கூட்டமைப்பு  (Association of South East Asian Nations, ASEAN), கிழக்காசிய உச்சியமைப்பு (East Asia Summit, EAS) ஆகியவற்றில் நாம் இடம்பெறுவதையும் சீனா விரும்பவில்லை. ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளின் ஆதரவினால் அது முறியடிக்கப்பட்டது. ஐ நா சபையின் பாதுகாப்புக் குழுவில் நாம் நிரந்தர உறுப்பினராக முற்சிப்பதையும் பல விதங்களில் செஞ்சீனா தடுத்து வருகிறது. 2019 ஆகஸ்டில் நாம் எடுத்த ஜம்மு-காஷ்மீர்-லடாக் தொடர்பான முடிவுகளை விவாதிக்க வேண்டுமென ஐ நா பாதுகாப்பு சபையைக் கூட்ட முனைந்தது. அதை அதன் மற்ற உறுப்பினர்கள் அனைவரும் நிராகரித்த போதும், செஞ்சீனாவின் ஐ நா நிரந்தர உறுப்பினர்,  பாதுகாப்பு சபையில் அந்த விஷயம் விவாதிக்கப்பட்டதைப் போலத் தோற்றத்தைப் பத்திரிக்கை நிருபர்களிடம் உண்டாக்க, சிறுபிள்ளைத்தனமாக,  முயற்சித்தார். அணுத்தொழில் நுட்பம் வழங்குவோர் குழுமக் கூட்டங்களிலும் நமக்கு எதிராக பலத்த எதிர்ப்பு இருப்பதைப் போன்ற மாயத் தோற்றத்தையே சீனா செய்ய முனைகிறது. இது செஞ்சீனாவின் சூழ்ச்சியையும், ஆணவத்தையும், முதிர்ச்சியற்ற போக்கையும் காண்பிக்கிறது. 2050ல் உலகை ஆளப்போவதற்கு அடிக்கோலிடும் சீனாவிற்கு அதற்குண்டான தகுதிகள் இல்லை.

2013ல் இருந்து ஒரு பெரும் முயற்சியை சீனா சர்வதேச அளவில் எடுத்துள்ளது. அதன் பெயர் ‘பட்டை மற்றும் சாலை முனைப்பு’ (Belt and Road Initiative, BRI) என்பதாகும். இது சீனாவின் பல முக்கியக் குறிக்கோள்களைத் தன்னுள்ளடக்கியது. ஏதாவது ஒன்றிரண்டாவது வெற்றி பெற்றால் அது நன்மைக்கே என்பதினால், செஞ்சீனாவின் முயற்சிகள் என்றுமே பல குறிக்கோள்களைக் கொண்டன. சீனா தனது நாட்டின் பிரம்மாண்ட உற்பத்தித் திறனைப் பயனுள்ள அன்னியச் செலாவணியாக ஈட்டவும், அந்நாடுகளில் முதலீடு செய்யவும், அதன் மூலமாக அங்குத் தன் செல்வாக்கை நிலைநாட்டவும்,  ஏனைய நாடுகளின் செல்வாக்கைக் குறைக்கவும், குறிப்பாக ஏழை நாடுகளுக்கு உதவி என்கின்ற போர்வையில் அவர்களைக் கடனாளியாக்கி அவர்களிடமிருந்து சலுகைகளைப் பெறவும் ஒரு ஆயுதமாக இந்தத் திட்டத்தை போர்த்திறஞ்சார்ந்த (strategic) திட்டமாகச் செயல்படுத்த முனைகிறது. நமது அண்டை நாடுகளான இலங்கை, மாலத்தீவுகள் (Maldives) போன்றவை அவ்வாறு மாட்டிக்கொண்ட நாடுகளில் சில. இலங்கையைக் கடனாளியாக்கி ஹம்பன்டோடா (Hambantota) துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்குச் சொந்தமாக்கிக் கொண்டது. கடன்பட்டார் நெஞ்சம் போல அன்று கலங்கிய ராவணனுக்கு அடுத்து தற்போது மறுமுறை அவ்வாறே நிகழ்ந்துள்ளது.

இந்த ‘பட்டை மற்றும் சாலை முனைப்பு’ திட்டத்தை நாம் ஆரம்பம் முதலே எதிர்த்து வருகிறோம். உலகின் முக்கியப் பொருளாதார நாடுகளில் இதை ஆரம்பம் முதலே வன்மையாக எதிர்த்து வருவது  நாம் மட்டுமே. ஏனெனில், இதன் முக்கிய முதல் திட்டம்  சீன-பாகிஸ்தானிய பொருளாதார வழித்தடம் (CPEC). இது நமது கில்கிட் வழியாக அமைகிறது. இது நமது இறையாண்மையைப் பாதிக்கிறது. இதற்குப் பதிலளித்த சீனா இது வெறும் பொருளாதாரம் சம்பந்தப்பட்டது மட்டுமே, எல்லை பிரச்சினையை  நீங்கள் இரு நாடுகளும் தீர்த்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறது. இது ஒரு ஓட்டை வாதம். தென் சீனக் கடலில் மற்ற நாடுகள் தங்கள் பொருளாதார மேம்பாட்டுக்காகத் தங்கள் கடல் பகுதிகளிலேயே  துறப்பணப் பணிகளைச் செய்வதை எதிர்க்கும் சீனா இங்கு இரட்டை வேடம் போடுகிறது. இரண்டாவது கில்கிட் பகுதிகளில் ‘வடக்கு அருவிகள்’ (Northern Cascades) என்கின்ற பெயரில் மிகப்பெரும் அணைகளை, மின்சார உற்பத்தி நிலையங்களை சீனா அமைத்து வருகிறது. இவற்றையும் நாம் எதிர்க்கிறோம். நம்மைப் பலமுறை சீனா வற்புறுத்தியும் நாம் இத்திட்டத்தில் இணைய மறுத்து விட்டோம். நாம் இணைந்திருந்தால் அது சீனாவிற்குப் பெரிய விளம்பரமாகவும் அமைந்திருக்கும், நம் நாட்டிலும் மிகப் பெரிய அளவில் அவர்கள் நுழைந்திருப்பார்கள். இவையெல்லாம் சீனாவிற்கு நம் மீது கோபம் அதிகரிக்கக் காரணங்கள். ஏற்கெனவே இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகத்தில் உள்ள இடைவெளி 3500 லட்சம் கோடி ரூபாய்கள் அவர்களுக்குச் சாதகமாக உள்ளது.  ஆனால், நம்முடைய பல ஏற்றுமதிகளைப் பல்வேறு காரணங்கள் காட்டித் தடுக்கிறது. ஆனால், நமது தனிப்பட்ட தரவுகளைச் சேகரித்துச் சீனாவிற்கு அனுப்பும் சீனக் கைபேசிச் செயலிகளை (mobile apps) நாம் தடை செய்தால் அது கோபம் கொள்ளுகிறது.

நாம் ஏன் நால்வர் அணியில் இணைய வேண்டும் ?

1962ல் செஞ்சீனா நம்மைத் தாக்குவதற்குக் கூறிய காரணங்கள் இன்றைக்கு ஒவ்வாது. இன்றைக்குச் சீனா 15 டிரில்லியன் டாலர் பொருளாதார வலிமை கொண்டது (நாம் வெறும் 3 டிரில்லியன் மட்டுமே). ராணுவ வலிமையில்  நம்மை விடப் பன்மடங்கு பலம் பொருந்தியது. உலக ராஜீய விஷயங்களில் நம்மை விடப்  பெரும் சக்தியாக விளங்குகிறது. அமெரிக்காவிற்கே பெரும் சவாலாக உள்ளது. விஞ்ஞானம், தொழில் நுட்பம், கணினி, செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), விண்வெளி ஆராய்ச்சி போன்ற கூரியமுறைத் தொழில்நுட்பங்களில் (cutting-edge technologies) முன்னணியில் உள்ளது. அவைகளுக்கான சூழ்நிலை மண்டலங்களை (ecosystems) நன்கு நிறுவியுள்ளது. நம் நாட்டில் இவையெல்லாம் பின் தங்கியே உள்ளன. அது தனது முன்னணி நிலைமையைத் தொடர,  பலப்படுத்தப் பல வழிமுறைகளைக் கையாளுகிறது. சீனர்கள் என்றுமே மற்ற தேசங்களின் அறிவை நாடுவதில் தயக்கம் காட்டியதில்லை. சீனர்கள் சிறந்த அறிவாளிகள் என்பதிலும் ஐயமில்லை. அதைப்போலவே, மற்றவர்களின் அறிவாற்றல்சார்ந்த உடமைகளைப் (Intellectual Property Rights) பல்வேறு வழிகளில் அபகரிக்கவும் தயங்கியதில்லை. நேரிடையாகவும், கணினிக் களவாடல் (hacking) மூலமும் அமெரிக்கா மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளிலிருந்து பல தொழில்நுட்பங்கள் சீனர்களால் திருடப்பட்டிருக்கின்றன. இதே வீச்சு நீடித்தால், 2050க்குள் அமெரிக்காவை சீனா விஞ்சும் என்று பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது. நாம் முறைகேடான வழிகளில் ஈடுபடுவதில்லை. ஒருமித்த கருத்தில்லாத நம்மைப் போன்ற ஜனநாயக நாடுகள், ஏகாதிபதியமுறை (autocratic) கொண்ட ஆட்சிகளைப்  போல அசுர வளர்ச்சி காண இயலாது. நம்மால் தனிப்பெரும் வல்லரசாகத் திகழ முடியாத பட்சத்தில் யார் வந்தால் என்ன என்று நாம் எண்ணலாம். ஆயினும், சீனாவின் அராஜகத்தனமான மனப்பாங்கு, குறிப்பாக கொரோனாவிற்குப் பின், அதிலும் மற்றவர்கள் தமக்குக் கப்பம் கட்டாத அடிமைகளாக வேண்டும், தான் இந்த உலகை ஆள  வேண்டும்  என்கின்ற எண்ணங்கள், தற்காலத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இவற்றை வெறும்  சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் கோட்பாடுகள் என்று புறந்தள்ள முடியாது, ஏனெனில், இவை அந்நாட்டு மக்களின் பழமையான எண்ணங்களைப் பிரதிபலிக்கின்றன. ஆயினும், சி ஜின்பிங் சீன அதிபரானவுடன் இவற்றை மிகத் தீவிரமாக அமல்படுத்தத் துவங்கி விட்டார்.

2500 ஆண்டுகளுக்கு முன் கிரேக்க தேசத்தில் வலிமை பெற்றுத் தனிப் பலத்துடன் ஆட்சி செய்து வந்த ஸ்பார்ட்டாவை (Sparta)  எதிர்த்தது வளர்ந்து வரும் ஏதென்ஸ் (Athens). துசைடைடிஸ் என்ற அன்றைய கிரேக்க வரலாற்றாசிரியர் இதை அலசியிருக்கிறார். அவர் பெயரால், இது போன்ற மோதல்கள், துசைடைடிஸ் கண்ணி  (Thucydides Trap) என்றே அறியப்படுகின்றன. தனிப்பெரும் சக்தியாகத் திகழும் எந்த  ஒரு நாடும்  தனக்கு ஒரு எதிரி வளருவதைத் தடுக்கவே முயலும். நேர்மாறாக, ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்த நாடு, மேலாட்சி செய்கிற (hegemonic) தனிப்பெரும் நாட்டிற்குச் சவால் .விடுவதும் இயற்கை. இவையே துசைடைடிஸ் கண்ணியின் அடிப்படை உண்மைகள். வரலாற்றில் பலமுறை துசைடைடிஸ் கண்ணியைத் துல்லியமாக நாம் கண்டிருக்கிறோம். பிரான்ஸ்-இங்கிலாந்து, இங்கிலாந்து-அமெரிக்கா, அமெரிக்கா-சோவியத் யூனியன் ஆகியவற்றிற்கிடையே    ஏற்பட்ட மோதல்கள் சிறந்த உதாரணங்கள். இவற்றின் நீட்சியே இன்று நாம் அமெரிக்காவிற்கும்-செஞ்சீனாவிற்கும் இடையே காண்பது. சீனா, நம்மையும், பிற்காலத்தில் ஒரு சக்தியாக உருவெடுத்து அதற்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடக் கூடாது என்ற தொலைநோக்குப் பார்வையில் இப்பொழுதே அடக்க நினைக்கிறது. அத்துடன், இப்போது அமெரிக்கா-சீனா இடையே நடக்கின்ற நிழல் யுத்தத்தில் நாம் எதிர்ப்பக்கம் சாய்வதைத் தடுக்கும் யுத்தியையும் கையாளுகிறது. நம்முடைய வள ஆதாரங்கள், வழி வகைகளைக் கொண்டு சீனாவைத் தனியாக நம்மால் இன்றைக்குக் கையாள முடியாது. நம் மீது தீராத பகை கொண்டுள்ள இரு அணு ஆயுத அண்டை நாடுகளான செஞ்சீனாவும், பாகிஸ்தானும் நமக்கெதிராகக் கை கோர்த்துள்ளன. சீனாவின் அறிவிக்கப்படாத 24வது பிரதேசமாக (province) பாகிஸ்தான் உள்ளது. எனவே, சில ஒருமித்த கருத்துடைய வலிமைமிக்க ஜனநாயக நாடுகளுடன் இணக்கநிலை வைத்திருப்பதே நமக்கு நன்மை.

இந்த நால்வர் அணியிலுள்ள நாடுகளுடன் நமக்கு இணக்கமான நட்பு நிலை எப்போதுமே இருந்துள்ளது. அவைகளுடன் நமக்கு நிலம், நீர் சம்பந்தப்பட்ட எல்லைப் பிரச்சினைகள் கிடையாது. மற்ற மூன்று நாடுகளுமே தாராளமான கருத்துக்களுடைய ஜனநாயக நாடுகள். குறிப்பாக, அமெரிக்காவும், ஆஸ்திரேலியாவும் பன்முகத் தன்மை கொண்ட நாடுகள். அவற்றுடன் நமக்கு மேம்பட்ட வர்த்தக உறவும் இருக்கின்றது, அவை மேலும் வளரும் சாதகமான சூழ்நிலையும் உள்ளது. அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் லட்சக்கணக்கான இந்தியர்கள் வசிக்கிறார்கள். உலக அமைப்புக்களால் இயற்றப்பட்ட விதிகளை அனைத்து நாடுகளும் பின்பற்றும் ஒழுங்குமுறை அவசியம் என்பதில் நாம் நால்வரும் முழு இணக்கம் கொண்டிருக்கிறோம், குறிப்பாகத் தென் சீனக் கடலில். இவற்றில் அமெரிக்கா, ஜப்பான் ஆகியவற்றுடன் பல ஆண்டுகளாக நெருக்கமான ராணுவத் தொடர்பும் நமக்கு உள்ளது.

எனவே, பலவகையிலும் நால்வரணி,  நமக்குப் பொருத்தமானது மட்டுமல்ல தேவையானதும் கூட.

மற்ற நால்வர் அணி நாடுகளுக்கும் சீனாவிற்குமான உறவுகளை அடுத்து வரும் பகுதிகளில் பார்ப்போம்.

(சுப்ரமண்யம் ஸ்ரீதரன், படிப்பின் மூலமும், வேலையின் மூலமும் ஒரு கணினி வல்லுநர். பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பல்லாண்டுகள் பணியாற்றிய போது, அதன் உலக சேவை வழங்கும் மையத்தின் சில பிரிவுகளுக்குத் தலைமைப் பொறுப்பேற்றார். இந்தியாவின் போர்திறஞ்சார்ந்த பாதுகாப்பு, இந்தியாவின் அண்டை நாடுகளுடனான உறவுகள், குறிப்பாக சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றைக் கூர்மையாக இருபத்தைந்தாண்டுகளாகக் கவனித்து வருபவர். இந்தியாவின் பாதுகாப்பை முதன்மைப்படுத்தி விவாதிக்கும் முன்னணி வலைத்தளம் ஒன்றின் செயலாட்சியராக இருக்கிறார். சென்னை சீன ஆய்வு மையத்தின் உறுப்பினர். Views expresses are personal.)


5 views0 comments

Comments


LATEST
bottom of page