top of page
Writer's pictureChennai Centre for China Studies

Creative Classics of China: Episode 9 of 18th Century Mandarin Classic “The Dream of Red Man

Updated: Jul 20, 2023

Translated into Tamil


Creative Classics of China No. 010/2023


சியா வம்சம் - ஒரு பின்னணிக்கதை...நிங்குவோ குங், யுங்குவோ குங் என்று இரு சகோதரர்கள் இருந்தார்கள். அவர்கள் அரண்மனையில் ஆற்றிய சிறந்த பணிகளைப் போற்றும் வகையில் பட்டமளித்து கௌரவிக்கப்பட்டார்கள்.


மூத்த சகோதரர் நிங்குவோவின் பேரன் தலைநகருக்கு எதிரே அமைந்த மலையில் துறவியாக வாழ்ந்துகொண்டு, ரசவாதம், குங்கும மாத்திரைகள் தயாரித்தல் போன்றவற்றில் ஈடுபட்டுவந்தான். ஆகவே அவனுக்குப் பதிலாக அவனுடைய மகன் சென் பட்டத்தைப் பெற்றுநிங்குவோ அரண்மனையை ஆண்டுவருகிறான். தந்தையின் போக்கு வேறுவிதமாக இருந்ததால், அவன் முறையாக வளர்க்கப்படவில்லை.


ஆகவே அவனால் திறமையாக ஆட்சி செலுத்த இயலவில்லை. அவனுக்கு பதினாறு வயதில் ஒரு மகன் இருக்கிறான்.யுங்குவோ அரண்மனை.இளைய சகோதரர் யுங்குவோவின் மறைவுக்குப் பின் அவருடைய மனைவி ஷி சீமாட்டி ஆட்சி செய்து வருகிறார்.


அவருக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் ஷே தற்போது பட்டத்து இளவரசராக உள்ளான். அமைதியான வாழ்க்கையை விரும்புபவன். ஆட்சி செலுத்துவதில் நாட்டமிலை. ஆனால் இளையவன் செங் அறிவிலும் குணத்திலும் தலைசிறந்தவன். ஆட்சிமுறையில் தேர்ந்த பயிற்சி பெற்றவன்.


சிறப்பு அரசாணை மூலம் மூன்றாம் நிலை அரசுத் தேர்விலிருந்து விலக்குப்பெற்று, தற்போது அமைச்சரவையில் உதவியாளராகப் பொறுப்பேற்றிருக்கிறான்.சென் குடும்பம் - ஓர் அறிமுகம்... சென் மனைவிக்கு நான்கு பெண்கள் பிறந்தார்கள்.


அவர்களில் மூத்தவள் ஆண்டின் முதல் மாதம், முதல் தேதியில் பிறந்தாள். ஓராண்டுக்குப் பின், ஒரு மகன் பிறந்தான்.


அவனுடைய வாயில் ஒளி பொருந்திய மரகதக்கல் இருந்தது! அதில் ஏதோ எழுத்துக்களும் காணப்பட்டன.

ஆகவே அவனுக்கு பாவோ யூ (பொக்கிஷக் கல்) என்று பெயர் சூட்டினர்.பாட்டியின் செல்லப் பேரனாக அவன் விளங்கினான்.


பழமையான ஒரு குலவழக்கப்படி, குழந்தையின் முதல் பிறந்தநாள் விழாவன்று அவனருகே பல்வேறு பொருட்களை வைப்பார்கள். குழந்தை எவற்றைத் தேர்ந்து எடுக்கிறதோ, அவற்றை வைத்து குழந்தையின் திறமைகளையும் எதிர்கால நாட்டங்களையும் உறுதி செய்துகொள்வார்கள்.


அவ்வாறு செய்தபோது, குழந்தை அழகு சாதனங்கள், நறுமணப் பொடிகள் மற்றும் கூந்தல் அலங்கார ஆபரணங்கள் போன்றவற்றைத் தேர்ந்தெடுத்தது. குழந்தையின் தந்தை செங்கிற்கு இது திருப்தியளிக்கவில்லை. ஆனால் பாட்டியோ, குழந்தையைச் சீராட்டி வளர்த்தாள்.குழந்தை அலட்சியப் போக்குள்ளவனாக இருந்தாலும், நல்ல அறிவுக் கூர்மையுள்ளவனாக விளங்கினான்.


அவ்வப்போது அவன் கூறும் சொற்கள் ஆச்சரியமளித்தன.."பெண்கள் நீரால் ஆனவர்கள். பெண்களின் சமூகத்தில் நான் உயிரோட்டமும், புத்துணர்வும் பெறுகிறேன். ஆண்கள் களிமண்ணால் ஆனவர்கள்.


ஆண்களின் சமூகத்தில் நான் மந்தமாய், மனம் தளர்ந்தவனாய் உணர்கிறேன்."சியா குடும்பங்களின்பின்னணியை லெங்விவரித்துக் கொண்டிருக்க, யூ சுங் இடைமறித்தார்:"நீங்கள் கூறியது போன்ற ஓர் அனுபவம் எனக்கும் இருந்தது. நான்கிங் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளைக்கு நான் ஆசிரியராக இருந்த காலம். மிகவும் வித்தியாசமானவன். பாடத்தில் கவனம் செலுத்தவே மாட்டான்.


என்னால் பொறுத்துக்கொள்ளவே முடியாத அளவிற்கு அலட்சியம் காட்டுவான். பாடம் படிக்கவும், அதில் கவனம் செலுத்தவும் அவனருகே பெண்கள் இருக்கவேண்டும்.


அவனைப்பொறுத்தமட்டில் "பெண்" என்ற சொல்லே மிகவும் மரியாதைக்குரிய ஒன்றாக இருந்தது. பணியாட்களுக்கும் உதவியாளர்களுக்கும் அவன் விநோதமாகக் கட்டளையிடுவான்: "பெண் என்ற சொல்லை உச்சரிப்பதற்கு முன்னால் உங்கள் அருவருப்பான வாய்களைத் தூய நீரால் நன்றாக சுத்தம் செய்துகொண்டு, நறுமணமிக்க தேநீரால் புத்துணர்வூட்டுங்கள்.


அவ்வாறு செய்யத் தவறினால், உங்கள் பற்களை உடைத்து, கண்களைத் தோண்டி எடுத்துவிடுவேன்!"இந்தப் போக்கு பொறுக்கமாட்டாமல் அவனுடைய தந்தை அவனை அடிப்பார். அப்போதெல்லாம் அவன் "அக்கா, அக்கா, தங்கை, தங்கை ! " என்று கூவி அழைப்பான். அவனுடைய ஒன்றுவிட்ட சகோதரிகள் அவனைப் பார்த்து சிரிப்பார்கள்.


அவனுக்காகப் பரிந்துபேச முன்வர மாட்டார்கள். அவனிடம் கேட்டால், அப்படிக் கூவுவது அடியின் வலியைத் தணிக்க உதவுகிறது என்பான். அவனைப் பொறுத்தமட்டில் அந்தச் சொற்கள் ஏதோ ரகசிய மந்திரம் போல் செயல்பட்டன.""அவன் படிக்காததற்கு ஆசிரியரின் திறமையின்மைதான் காரணம் என்று அவனுடைய பாட்டி கூறுவாள். தன் மகனிடம் முறையிட்டு, ஆசிரியரைப் பணிநீக்கம் செய்துவிடுவாள். நான் அதற்கு முன்பாகவே பணி விலகிவிட்டேன்.


என்றாலும் ஒரு விஷயம் சொல்லித்தான் ஆகவேண்டும். அவனுடைய ஒன்றுவிட்ட சகோதரிகள் உண்மையிலேயே திறமையானவர்கள்."லெங் தொடர்ந்தார்:"ஷி சீமாட்டிக்கு மூன்றுமகள்கள்.


அவர்களுள் மிகவும் இளையவள்தான் உப்பளங்களின் தலைமை அதிகாரி லிங்கின் மனைவி. அவர்களுக்குப் பிறந்தவள்தான் தாய்யூ. ஷி சீமாட்டியின் இரண்டு மகன்களில் மூத்தவர் ஷே, இரண்டாமவர் சென். ஷேயின் இரண்டு மகன்களில் இளையவன் லியென் அரசாங்கப் பணிகளில் பட்டம் பெற்றவன்.


நல்ல உலக அறிவுள்ளவன். நாட்டுப் பணிகளில் இளையதந்தை சென்னுக்குஉதவியாக இருந்துவருகிறான்." மாலை இருள் சூழத் தொடங்கியிருந்தது. நகரின் வாயிற்கதவுகள் அடைக்கும் நேரம். இருவரும் புறப்படத் தயாரானார்கள். நகரை நோக்கி நடந்தவாறே பேசிக்கொள்ளலாம் என்று தீர்மானித்தார்கள்.


மதுவகைகளுக்கான கட்டணத்தைச் செலுத்திவிட்டு வெளியேற முற்பட்டபோது, பின்னாலிருந்து ஓர் உரத்த குரல் கேட்டது:"வாழ்த்துக்கள்! உங்களுக்கு ஒரு வரவேற்புச் செய்தி காத்திருக்கிறது! "


Previous Chapters can be accessed in the following links attached below:


Chapter 8 of the 18th Century Mandarin Classic “Dreams of Red Mansions” in Tamil, can be read at this link:


Chapter 7 of the 18th Century Mandarin Classic “Dreams of Red Mansions” in Tamil, can be read at this link:


Chapter 6 of the 18th Century Mandarin Classic “Dreams of Red Mansions” in Tamil, can be read at this link:



Chapter 5 of the 18th Century Mandarin Classic “Dreams of Red Mansions” in Tamil, can be read at this link:



Chapter 4 of the 18th Century Mandarin Classic “Dreams of Red Mansions” in Tamil, can be read at this link: சிவப்புமாடங்களின் கனவு- Episode 4


Chapter 3 of the 18th Century Mandarin Classic “Dreams of Red Mansions” in Tamil, can be read at this link: சிவப்பு மாடங்களின் கனவு – Episode 3


Chapter 2 of the 18th Century Mandarin Classic “Dreams of Red Mansions” in Tamil, can be read at this link: சிவப்பு மாடங்களின் கனவு – Episode 2


Chapter 1 of the 18th Century Mandarin Classic “Dreams of Red Mansions” in Tamil, can be read at this link: சிவப்பு மாடங்களின் கனவு – Episode 1

Read the preface at this link: முன்கதை




(Uma Balu is Member, C3S. She is an Entrepreneur, Writer, Artist, Language Trainer, Translator and Interpreter. She is Founder and Director of Sahara Asia, which focuses on Professional Language & Culture Services. She is Vice-President, BRICS Generation, Chennai; Member, Indian Translators Association, INTACH; and Member, BRAWE group for Women Entrepreneurs. She is a Japanese Language Trainer, Translator and Interpreter and is Program Director, Language Labs. She has presented papers on language and culture at many national and international conferences. She is fluent in English, Japanese, Tamil, Malayalam and Hindi. Her hobbies include language learning and studying world cultures and classics.)
27 views0 comments

Comments


LATEST
bottom of page