Translated to Tamil
Image Courtesy: 03 Page 14-29 A dream of red mansions
Creative Classics of China No. 11/2023
காட்சி 1
கறுப்பு மரகதத்தின் தோணி ~ நகரத்தின் எல்லையை வந்தடைந்தது. அங்கு அவளை வரவேற்க ஒரு பல்லக்கு காத்திருந்தது. கூடவே பெட்டி, படுக்கைகளை ஏற்றிச் செல்ல வண்டிகள். வெவ்வேறு விதமான சீருடைகள் அணிந்த மூன்று பணிப்பெண் குழுக்கள். அவளுடைய தாய் சின் லிங் நகரத்தின் செலவச் செழுமை, சிறந்த பராமரிப்பு ஆகியவை பற்றிப் பெருமையாகப் பேசுவாள். இந்த ஏற்பாடுகள் அனைத்தும் அதைக் கண்முன்னே பறைசாற்றின.
கறுப்பு மரகதம் மிகவும் பணிவாக, அதிகம் பேசாமல் பல்லக்கில் ஏறிக்கொண்டாள். நகரத்தின் வாயில்களைக் கடந்து உள்ளே செல்கையில், ஆர்வத்தோடு எட்டிப்பார்த்தாள். வீதிகளில் ஏராளமான மக்கள் உற்சாகத்தோடும் பரபரப்போடும் காணப்பட்டார்கள். இதுபோன்ற காட்சியை அவள் ஒருபோதும் யாங்சௌ நகரத்தில் கண்டதில்லை.
விரைவிலேயே மூன்று வாயில்கள் கொண்ட ஒரு மாபெரும் வளைவை அடைந்தார்கள். இருபுறமும் பளிங்குக் கல்லால் ஆன சிங்கங்களின் உருவச்சிலைகள். பக்கவாட்டு வாயில்கள் வழியே சிலர் போவதும் வருவதுமாக இருந்தார்கள். மத்தியில் உள்ள வாயிலின் கதவு மூடியிருந்தது. அதில் "நிங் குஓ அரண்மனை - அரசாங்க ஆணையின்படி கட்டப்பட்டது" என்று செதுக்கிய எழுத்துக்கள் காணப்பட்டன. மூன்று கதவுகளிலும் விலங்குகளின் தலைகள் போன்ற அமைப்பில் கைப்பிடிக் குமிழ்கள் பொருத்தப்பட்டிருந்தன.
அங்கிருந்து சற்று முன்னே சென்றதும், யுங் குஓ அரண்மனையின் வாயில் தென்பட்டது. அதுவரையில் உடனிருந்த பணிப்பெண் குழுக்கள் கீழே இறங்கிக்கொண்டார்கள். பல்லக்குத் தூக்கிகளும் மாறினார்கள். பின் பணிப்பெண்கள் ஊர்வலமாய்ப் பின்தொடர, கறுப்பு மரகதத்தின் பல்லக்கு பசுங்கொடிகள் படர்ந்த மலர்களின் தோரணவாயிலை வந்தடைந்தது.
கறுப்பு மரகதம் இறங்கிக்கொண்டாள். கூரை வேய்ந்த இரண்டு பாதைகளைக் கடந்து, ஒரு பெரிய மாளிகையை அடைந்தாள். அங்கு கல்லில் செதுக்கப்பட்ட பலகை ஒன்று சிவப்புச் சந்தனத்தால் ஆன பீடத்தில் கம்பீரமாக வீற்றிருந்தது. அது "ஆவித் திரை" என்று அழைக்கப்பட்டது.
அந்த மாளிகையின் பின்புறத்தில் இருந்த மூன்று சிறிய மைதானங்களைக் கடந்து, முடிவில் ஐந்து அறைகள் கொண்ட இளவரசி மூதாதையின் மாளிகையை அடைந்தார்கள். செலவச் செழிப்புடன், அலங்காரமாகக் காட்சியளித்தது அது. அழகிய வேலைப்பாடுகள் அமைந்த சுவர்கள் மற்றும் தூண்களில் ஊசலாடும் தங்கக் கூண்டுகள்.. அவற்றில் இனிமையாகக் கூச்சலிடும் பச்சைக்கிளிகள்..
சிவப்பு மற்றும் பச்சை வண்ணங்களில் உடையணிந்த பணிப்பெண்கள் அவளை உற்சாகத்துடன் வரவேற்றார்கள். "லிங் சீமாட்டி வந்துவிட்டார்!" என்று அறிவித்தபடி அவளை உள்ளே அழைத்துச் சென்றார்கள்.
வெள்ளிக்கம்பிகளாய்த் தோற்றமளிக்கும் தலைமுடியுடன் கம்பீரமாகக் காட்சியளித்த இளவரசி மூதாதை, இருபுறமும் பணிப்பெண்கள் துணைவர அவளைக் கனிவோடு எதிர்கொண்டார்.
"இவர்தான் என் தாய்வழிப் பாட்டியாக இருக்கவேண்டும்."
கறுப்பு மரகதம் மிகுந்த பணிவுடனும் மரியாதையுடனும் முழங்காலிட்டு வணங்க முற்பட்டாள். அதற்குள் கண்களில் நீர் தளும்ப அவளை வாஞ்சையுடன் ஆரத் தழுவிக் கொண்டார் இளவரசி மூதாதை. பின் அவளுடைய அத்தைகளை அறிமுகம் செய்து வைத்தார்.
சற்று நேரம் பொறுத்து, "வசந்தத்தின் வணக்கம், வசந்தத்தின் சுவை மற்றும் வசந்தத்தின் சோகம் - மூவரையும் அழைத்து வாருங்கள். இன்று நமக்கு முக்கிய விருந்தினர் வந்துள்ளதால், பாடங்கள் நாளைக்கு ஒத்திவைக்கப்படுகின்றன" என்று அறிவித்து, பணிப்பெண்களை அனுப்பிவைத்தார்.
விரைவிலேயே மூன்று செவிலித்தாய்கள் மற்றும் ஆறு பணிப்பெண்கள் புடைசூழ அவர்கள் குதூகலமும் கும்மாளமுமாக வந்து சேர்ந்தார்கள். அனைவருக்கும் தேநீர் பரிமாறப்பட்டது.
வசந்தத்தின் வணக்கம் - சராசரி உயரம், சற்றே கொழுத்த உடல்வாகு, படிந்த மூக்கு.
வசந்தத்தின் சுவை - மெலிந்த உடல்வாகு, சிறுத்த இடை, நீள்வட்ட முகம், ஆழமான கண்கள்.
வசந்தத்தின் சோகம் - வர்ணிக்கும் வயதை அவள் இன்னும் எட்டியிருக்கவில்லை.
எல்லோரும் ஆர்வத்தோடும் அக்கறையோடும் அவளிடம் விசாரித்தார்கள் - அவளுடைய தாயின் நோய்நிலை, பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள், அவளுடைய தாயின் இறுதிச் சடங்குகள் என.
கறுப்பு மரகதம் பொறுமையாகப் பதிலளித்தாள். பன்னிரண்டு வயதே ஆகியிருந்தாலும், அதற்கும் மீறிய மனமுதிர்வு, திரட்சியான உடல்வாகு, வாழ்க்கையின் மீது அலாதியான ஆர்வம். இரத்தச்சோகையின் சாயல் தெரிந்தது.
இளவரசி மூதாதை நலம் விசாரித்தார்: "நீ மருந்துகள் ஏதும் எடுத்துக்கொள்வதில்லையா, கண்ணே?"
"சிறு வயது முதலாகவே எனக்கு இரத்தசோகை இருந்து வந்தது. ஒரு நாள் அழுக்கு உடைகளும் அருவருப்பான தோற்றமும் கொண்ட பிக்கு ஒருவர் எங்கள் வீட்டிற்கு வந்தார். என் பெற்றோரிடம் என்னைக் காப்பகத்தில் சேர்த்துவிடுமாறு கூறினார். வீட்டில் நிலவும் சூழல் என் நோயை மேலும் அதிகரிக்கும் என்று எச்சரித்தார். ஆனால் என் பெற்றோர் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. கின்செங் வேர்கள் மற்றும் இரத்தத்திற்கு வலிமை சேர்க்கும் மாத்திரைகள் ஆகியவற்றை எனக்குத் தொடர்ந்து அளித்துவந்தார்கள்."
"கவலைப்படாதே கண்ணே. நீ இதுவரை என்னென்ன மருந்துகள் உட்கொண்டு வந்தாயோ, அவை அனைத்தும் தவறாமல் தினமும் உனக்கு கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்."
இளவரசி மூதாதை பேசிக்கொண்டிருந்த போதே, ஓர் அழகிய இளம் பெண் உள்ளே நுழைத்தாள். மிகுந்த வேலைப்பாடுகள் பொருந்திய நகைகள் அணிந்துகொண்டு, தேவதை போல் காட்சியளித்தாள். கறுப்பு மரகதத்தை நோக்கி முகம் மலரப் புன்னகை செய்தாள்.
"இவள்தான் எங்கள் மாளிகையின் தேவதை. இவளை நீ ஃபீனிக்ஸ் என்று அழைக்கலாம்" - இளவரசி மூதாதை அறிமுகம் செய்துவைத்தார்.
தாய் கூறியது நினைவுக்கு வந்தது. மாமா செங்கின் மனைவி நீ வாங். அவளுடைய சகோதரர் மகள்தான் இவள். மேலும், இளவரசர் ஷியேயின் இளைய மகன் சின் லியேனின் மனைவி.
கறுப்பு மரகதம் எழுந்து பணிவுடன் வணக்கம் தெரிவித்தாள். ஃபீனிக்ஸ் அவளை உச்சி முதல் உள்ளங்கால் வரை ஏற இறங்க ஒருமுறை பார்த்துவிட்டு, தோள்களை லேசாகப் பிடித்து இருக்கையில் அமரச் செய்தாள். பின் கண்களில் நீர் மல்க, பாசத்தோடு நலம் விசாரித்தாள்.
"அடிப்பெண்ணே, நாங்கள் எல்லோரும் இப்போதுதான் ஒரு சுற்று கண்கலங்கி முடித்திருக்கிறோம். இனி நீ தொடங்கிவிடாதே!" - இளவரசி மூதாதை கேலி செய்தார்.
ஃபீனிக்ஸ் கண்களைத் துடைத்துக் கொண்டு மீண்டும் கலகலப்பான நிலைக்கு வந்தாள். கறுப்பு மரகதத்தின் வயது, உடல்நலன், கல்வி, பிடித்த உணவுகள், விளையாட்டுக்கள் என அனைத்தையும் கேட்டறிந்தாள்.
"உனக்கு எது தேவையென்றாலும் பணிப்பெண்ணை என்னிடம் அனுப்பி வை, என்ன?"- அவளுடைய வார்த்தைகளில் அக்கறை தெரிந்தது.
விருந்தினர்களின் பெட்டி, படுக்கைகள் உள்ளே எடுத்து செல்லப்பட்டன. கறுப்பு மரகதத்துடன் வந்திருந்த பணிப்பெண்களுக்கு அறைகள் ஒதுக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து, ஃபீனிக்ஸ் செங் அத்தையுடன் மாளிகைக்கான செலவுகள், துணிமணிகள் போன்றவை பற்றிக் கலந்தாலோசித்தாள்.
"இவள் உண்மையிலேயே இந்த மாபெரும் மாளிகையின் உயிர்நாடிதான்..." - கறுப்பு மரகதம் மனதுக்குள் எண்ணிக்கொண்டாள்.
Previous Chapters can be accessed in the following links attached below:
Chapter 10 of the 18th Century Mandarin Classic “Dreams of Red Mansions” in Tamil, can be read at this link: சிவப்புமாடங்களின் கனவு – Episode 10
Chapter 9 of the 18th Century Mandarin Classic “Dreams of Red Mansions” in Tamil, can be read at this link: சிவப்புமாடங்களின் கனவு – Episode 9
Chapter 8 of the 18th Century Mandarin Classic “Dreams of Red Mansions” in Tamil, can be read at this link: சிவப்புமாடங்களின் கனவு – Episode 8
Chapter 7 of the 18th Century Mandarin Classic “Dreams of Red Mansions” in Tamil, can be read at this link: சிவப்புமாடங்களின் கனவு – Episode 7
Chapter 6 of the 18th Century Mandarin Classic “Dreams of Red Mansions” in Tamil, can be read at this link:சிவப்புமாடங்களின் கனவு – Episode 6
Chapter 5 of the 18th Century Mandarin Classic “Dreams of Red Mansions” in Tamil, can be read at this link:சிவப்புமாடங்களின் கனவு – Episode 5
Chapter 4 of the 18th Century Mandarin Classic “Dreams of Red Mansions” in Tamil, can be read at this link: சிவப்புமாடங்களின் கனவு- Episode 4
Chapter 3 of the 18th Century Mandarin Classic “Dreams of Red Mansions” in Tamil, can be read at this link:சிவப்பு மாடங்களின் கனவு – Episode 3
Chapter 2 of the 18th Century Mandarin Classic “Dreams of Red Mansions” in Tamil, can be read at this link:சிவப்பு மாடங்களின் கனவு – Episode 2
Chapter 1 of the 18th Century Mandarin Classic “Dreams of Red Mansions” in Tamil, can be read at this link: சிவப்பு மாடங்களின் கனவு – Episode 1
תגובות